மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

தமிழ்நாடு முழுவதும், மின்சார வாரியத்திற்கு உபகரணங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் மற்றும் பிற உபகரணங்களை வழங்குவதில் தொடர்புடைய நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத் தரகர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணா நகர், நீலாங்கரை, நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெறுகின்றன.

தேனாம்பேட்டையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவர் வீட்டிலும், தியாகராய நகரில் பந்தாரி என்பவர் வீட்டிலும் புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் மகேந்திரா பி.ஜெயின் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல்சாவடியில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தில் காலை 5 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு  பணி மற்றும் மின் சாதனப்  பொருட்கள் கொள்முதல் பணிகளில் ஈடுபட்டு வரும்  ராதா எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்புடைய  இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் சென்னை ராதா இன்ஜினியரிங் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: அமைச்சா் உதயநிதியிடம் ரூ.25 லட்சம் வழங்கிய கால்ஸ் குழும தலைவர்!