
அம்பாசமுத்திரம் அருகே உள்ள அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவருக்கு, வாகைக்குளத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2 மாத்திலேயே கணவரை பிரிந்த சங்கீதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருவரும் பிரிந்து செல்ல சம்மதம் தெரிவித்து எழுதி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சங்கீதாவுக்கு அவரது பெற்றோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்த பொன்ராஜ் உடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவருடன், சங்கீதா மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், சங்கீதா வேறு ஒருவரை திருமணம் செய்ததை அறிந்த, கண்ணன் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக, இன்று காலை பத்திரிக்கை வைப்பதாக கூறி கல்லூத்து கிராமத்திற்கு சென்ற கண்ணன், சங்கீதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பொன்ராஜ் வெளியே சென்றிருந்த நிலையில் சங்கீதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கீதாவை சரமாரியாக வெட்டிக் கொன்றனார். பின்னர், அங்கிருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீரகேரளம்புதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முதல் கணவர் கண்ணனை தேடி வருகின்றனர்.