வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத மகன் : தாய், தந்தை மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல்!!

மகன் கடன் கட்டாததால் கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவரின் தந்தை மற்றும் தாயை கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத மகன் : தாய், தந்தை மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல்!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குழந்தைகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி. இதே பகுதியில் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் செல்வக்குமார் ராமேஸ்வரம் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார்.

செல்வகுமார், இதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி கேட்டபோது செல்வகுமார் அதை தர மறுத்துள்ளார். இதனால் சிவகுமார் அவரது உறவினர் காளிமுத்து குப்பாத்தாள் மற்றும் பிரேமா ஆகியோர், தோட்டத்தில் தங்கி உள்ள கருப்பசாமியிடம் உனது மகன் கடன் வாங்கிவிட்டு கடன் கொடுக்கவில்லை உடனடியாக வட்டியையும் கடன் வாங்கிய பணத்தையும் உடனடியாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

கருப்பசாமி, எனது மகன் ஊருக்கு வந்தவுடன் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சிவகுமார் மற்றும் அவரது மாமனார் காளிமுத்து மற்றும் இரு பெண்கள் சேர்ந்து கருப்பசாமி மற்றும் அவரது மனைவி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் கருப்பசாமிக்கு கை உடைந்தது. அதேபோல் அவரது மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு சிவகுமார் மற்றும் அவரது மாமனார் காளிமுத்து மற்றும் பிரேமா, குப்பாத்தாள், ஜெகதீஷ் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். வலியால் கூச்சலிட்ட இருவரையும் அருகில் இருந்தவர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, கருப்பசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது எனது மகன் கடன் வாங்கியுள்ளது எனக்கு தெரியாது. அவர் ராமேஸ்வரத்தில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சிவக்குமார் மற்றும் அவரது மாமனார் ஆகியோர் என்னிடம் வந்து பணத்தை கேட்டார் எனது மகனிடம் சொல்லுகிறேன் என்று கூறியவுடன்,  அவர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். நாங்கள் வயதானவர்கள் என்பதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இரு பெண்கள் மற்றும் ஆண்கள் நான்கு பேரும் சேர்ந்து எங்களை தாக்கியதில் நாங்கள் கீழே விழுந்து விட்டோம் இதில் எனக்கு கை உடைந்துள்ளது. அதேபோல் என் மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. ஆகவே மாவட்ட காவல்துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.