தேக்கு மரங்களை கடத்திய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்திய பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் கடந்த 5ம் தேதி பள்ளி வளாகத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்களை அரசு அனுமதியின்றி பள்ளி விடுமுறை நாளில் இரவோடு இரவாக பள்ளி தலைமை ஆசிரியர் துரை என்பவர் வெட்டி கடத்தியுள்ளார்.

இதையறிந்த அதிமுகவினர் மற்றும் கிராம மக்கள் பள்ளி தலைமை ஆசிரியரை சிறைப்பிடித்தும் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்வித்துறை, காவல்துறை மற்றும்  வருவாய் துறை, வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது செய்த தவறை பள்ளி தலைமை ஆசிரியர் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் உண்மையை ஒப்புக்ண்டாலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் அதிகாரிகள் எடுக்காததால், நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்  எதிரொலியாக இன்று ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய துவக்க  பள்ளி தலைமை ஆசிரியர் துரையை  பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஏ.எஸ். அமுதா துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.