கோவையில் பெருகும் பாலியல் தொழில்... பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 4 பேர் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் பெருகும் பாலியல் தொழில்... பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 4 பேர் கைது
கோவை சரவணம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு சரவணம்பட்டி மகாநகர் பகுதியில் உள்ள வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இருந்துள்ளனர்.
 
தொடர்ந்து நடந்த விசாரணையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அஜித் மோன், கர்நாடகா மாநிலம் பிஜ்பூர் பகுதியைச் சேர்ந்த மஹந்த்ஷா. இவர்கள் மூலம், வாடகைக்கு வீடு எடுத்து இரண்டு பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
 
இதில் ஒரு பெண் கேரளாவை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார்.
 
அங்கிருந்து சென்று பெங்களூரில் சில மாதங்கள் இருந்ததாகவும், பிறகு கோவை காந்திபுரம் பகுதியில் ஒரு வீட்டுக்கு பணிப் பெண்ணாக வந்ததாகவும் தெரிகிறது. அவரை அஜித் மோன் மற்றும் மஹந்த்ஷா வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததாக அவர் போலீஸில் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார், அஜித்மோன் மற்றும் மஹந்த்ஷா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடனடியாக சிறையில் அடைத்தனர்.பெண்கள் இருவருரையும் காப்பகத்துக்கு அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால் வங்கதேச பெண் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு நுழைந்ததால், அவர் மீது வெளிநாட்டினர் சட்டம் 1946-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
 
அந்தப் பெண் தொடர்பான தகவலை வங்கதேச போலீஸாருக்கு தெரிவித்த நிலையில், இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.