கல்லால் அடித்து கொல்லப்பட்ட மீனவர் : தலைமறைவான நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

தூத்துக்குடியில் பகலில் மீனவர், இரவில் டீசல் திருடன் என வாழ்ந்து வந்தவர்  கல்லால் அடித்துக் கொலை -  மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

கல்லால் அடித்து கொல்லப்பட்ட மீனவர் : தலைமறைவான நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர்விகாஸ் நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 31), கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடலுக்கு சென்று வந்த பின்பு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இவர் டீசல் திருடும் வேலையையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று இரவும் சிப்காட் காட்டுப்பகுதியில் டீசல் திருடுவதற்காக அலெக்ஸ் கேன்களை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது அவர் உள்பட அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், அலெக்ஸை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமுற்ற அலெக்ஸ் அதிக ரத்தம் வெளியேறி அவ்விடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் காட்டுப் பகுதியில் மர்மநபர் ஒருவர் இறந்து கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர்  இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ்  தலைமையில் சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். தொடர்ந்து கொலையான அலெக்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அலெக்ஸுக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதவிர அவர் மீது பாலியல் தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பெண் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அலெக்ஸ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது திருட்டில் கிடைத்த லாபத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.