மீனவரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்...என்ன காரணம்?

மீனவரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்...என்ன காரணம்?

ஈரோடு மாவட்டம் எல்லபாளையம் தொட்டியம்பட்டியில் நிலத்தகராறு காரணமாக மீனவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நிலத்தகராறு காரணமாக முன்விரோதம்:

ஈரோடு அடுத்த எல்ல பாளையம் தொட்டம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு நதியா என்ற மனைவியும் , இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கும், இவரது உறவினர் ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மீனவர் வெட்டி கொலை:

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற கணேசனிடம், உறவினர்கள் 3 பேர் நில தகராறு தொடர்பாக மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கணேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலைகுலைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையும் படிக்க: முடிவுக்கு வந்த வேலை நிறுத்தப் போராட்டம்...முதலமைச்சர் பேசியது என்ன?

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த வீரப்பன்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்,  கணேசனை கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  இருப்பினும், முன்விரோதம் காரணமாக மீனவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது