மனைவியிடம் கோபித்துக் கொண்ட கணவன்...ஆத்திரத்தில் தந்தை, இரு மகள்கள் கிணற்றில் குதித்து தற்கொலை

செங்கல்பட்டு அருகே கிணற்றில் குதித்து தந்தையும், இரு மகள்களும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவியிடம் கோபித்துக் கொண்ட கணவன்...ஆத்திரத்தில் தந்தை, இரு மகள்கள் கிணற்றில் குதித்து தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கடம்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மூன்று பேரின் உடல்களை கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார் கிணற்றில் இருந்து  பெரியவர் ஒருவரின் சடலத்தையும் இரண்டு குழந்தைகளின் சடலத்தையும் மீட்டனர். 

இதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஞானவேல் என்பதும், அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் பூஜா என்பது தெரியவந்தது. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஞானவேல் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியிடம் கோபித்துக் கொண்ட ஞானவேல் தனது இரு மகள்களையும் ஆட்டோவில் அழைத்து வந்து கடம்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குடும்ப பிரச்சனை காரணமாக மூவரும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.