வித்தியாசமான முறையில் மிரட்டி பணம் பறித்த டேட்டா என்ட்ரி நிறுவனம்... குவியும் புகார்கள்!!

டேட்டா என்ட்ரி பணிக்கு அழைப்பு விடுத்து நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

வித்தியாசமான முறையில் மிரட்டி பணம் பறித்த டேட்டா என்ட்ரி நிறுவனம்... குவியும் புகார்கள்!!

கொரோனா ஊரடங்கின் காரணமாக  பலர் வேலையின்றி வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், பலர் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கும் வகையில் வேலைகளைத் தேடி வருகின்றனர். அந்த வகையில் Fyon Tech Enterprises என்ற போலி தனியார் நிறுவனம் ஒன்று டேட்டா என்ட்ரி பணிக்கு ஆட்கள் தேவையென்றும் வீட்டிலிருந்தே அதிக வருமானம் ஈட்டலாம் எனவும் இணையத்தில் விளம்பரம் செய்து, தங்களை அணுகுபவர்களிடம் ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை வேலை வாங்கிவிட்டு பின்னர் செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காமல் நீங்கள் செய்த வேலையில் தவறு உள்ளது என்று கூறி மிரட்டி நஷ்டயீடு கொடுக்குமாறு மிரட்டிப் பணம் பறித்து வருவதாகக் புகார்கள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான திவாகர் (24) Fyon Tech Enterprises நிறுவனம் மீது ஜே.ஜே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் தான் வேலை தேடியபோது Fyon Tech Enterprises நிறுவனத்தின் விளம்பரத்தைக் கண்டு அவர்களை அணுகியதாகவும், இணையவழியில் ஒரு அப்ளிகேஷணை பூர்த்தி செய்து கொடுத்தால் 20 ரூபாய் வீதம் எத்தனை அப்ளிகேஷன் பூர்த்தி செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார்போல் வருமானம் பெறலாம் எனவும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர்களின் அறிவுறுத்தலின்படி தான் 800 அப்ளிகேஷன்களை பூர்த்தி செய்து அனுப்பிய நிலையில் அதற்கான சம்பளத்தை அளிக்காமல் தனது பணியில் தவறிருப்பதாகக் கூறி நஷ்டயீடாக 20 லட்சம் தருமாறு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவர்களின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் சொன்ன வங்கி கணக்கிறகு 1.90 லட்சம் பணத்தை செலுத்தியதாகவும், பின்னர்தான் அந்த நிறுவனம் போலியான நிறுவனம் என்பதை அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை ஏமாற்றி பணம் பறித்த அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திவாகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெ.ஜெ நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழக காவல் துறையினர் சார்பில் பணம் பறிக்கும் நோக்கில் போலியாக வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி வரும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் தொலைபேசி அழைப்புகளை தவிர்த்துவிட வேண்டுமென்றும், அவர்களின் பேச்சை நம்பி பணத்தை பறிகொடுத்துவிட வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க http://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல் தவித்து அலைமோதிக் கொண்டிருக்கும் மக்களின்  மனநிலையை பயன்படுத்தி இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபட்டு பணம் பறிக்கும் கும்பல்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.