கோவாவுக்கு உல்லாச பயணம் செய்ய கடத்தல் நாடகம்; 15லட்சம் கேட்டு மிரட்டிய பரபரப்பு சம்பவம்:

நெல்லை பாளையங்கோட்டையில் கடனை அடைத்து விட்டு கோவாவுக்கு சென்று உல்லாசமாக வாழ, தந்தையிடம் 15 லட்ச ரூபாய் கேட்டு, மகன் கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவாவுக்கு உல்லாச பயணம் செய்ய கடத்தல் நாடகம்; 15லட்சம் கேட்டு மிரட்டிய பரபரப்பு சம்பவம்:

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வேல்ராஜ் என்பவர் தனது தந்தை இசக்கி முத்துவுடன் சேர்ந்து தச்சு வேலை செய்து வருகிறார். வேல்ராஜுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், மனைவி 2ம் குழந்தையின் பிரசவத்துக்காக தூத்துக்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றதாக தெரிகிறது. குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை பார்க்கச் சென்ற வேல்ராஜ் அடுத்த நாளே ஊருக்கு கிளம்பியதாக தெரிகிறது.

தொடர்ந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வரும் தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி வேல்ராஜ், தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இசக்கிமுத்துவும் சென்ற நிலையில், வெகு நேரம் ஆகியும் மகன் வராததால் அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது தன்னை பலர் சேர்ந்து கடத்தி வைத்துள்ளதாகவும் 15 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாகவும் கூறி வேல்ராஜ் தந்தையிடம் கதறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த இசக்கிமுத்து, உடனடியாக காவல்நிலையம் சென்று புகார் அளிக்கவே, செல்போன் சிக்னலை வைத்து ஊருடையார்புரத்தில் வேல்ராஜ் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து சம்பவ இடம்சென்ற போது வேல்ராஜ் உட்பட 3 பேர் அங்கு சாவகாசமாக இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. 

குறைந்த விலைக்கு நகை வாங்கிக் கொடுத்து, கமிஷன் தொகையை பிரித்துக்கொள்ளலாம் எனக்கூறி வேல்ராஜ் தனது நண்பர்களிடம் 1 லட்ச ரூபாய் பணம் வாங்கியதாகத் தெரிகிறது. அப்பணத்தைக் கொண்டு கோவா சென்று வேல்ராஜ் உல்லாசமாக இருந்த நிலையில், பணத்தை திரும்பக் கேட்டு நண்பர்கள் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் கோவா செல்லும் ஆசையில் இருந்த வேல்ராஜ், தனது தந்தையிடம் கடத்தல் நாடகம் போட்டு பணம் பெற முயற்சித்தது உறுதியாகியது. இதைத்தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஊதாரித்தனமாக நண்பர்களுடன் பணத்தை செலவழித்து விட்டு கோவா சென்று உல்லாசமாக இருந்த மகன், அதே ஆசையில் தந்தையிடமே நாடகம் போட்டு பணம் பறிக்க முயற்சித்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பேராசை மகனுக்காக பதறியடித்துச் சென்று போலீசாரிடம் கண்ணீருடன் நின்ற தந்தை, தற்போது ஏமாற்றத்துடன் நிற்கதியாய் நின்றார். இந்நிலையில் உண்மை தெரிந்த பின்பும், தனது புகாரின் மீது அவர் அழுத்தம் கொடுக்காததால், தந்தை - மகன் இருவரையும் போலீசார் விடுதலை செய்தனர்.