கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணை உடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த காங்கியனூர் கிராமத்தில் பெரிய ஓடையில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நீர்வரத்து வருகின்றது.
இதில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாயத்திற்கு நீரை சேமித்து பருவ காலங்களில் நீரை வெளியேற்றி விவசாயத்திற்கு பாசன வசதி பெறுவதற்காக அந்தப் பெரிய ஓடையில் ரூபாய் 15- லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.
பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா கூட நடைபெறவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே தடுப்பணை சேதம் அடைந்து உடைந்ததால் நீர் நான்கு முனைகளிலும் வெளியேறுவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே தரமற்ற முறையில் தடுப்பணை கட்டிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்