திமுக பிரமுகர் கொலை வழக்கு...தலைமறைவாக இருந்த ரவுடியை கைது செய்த போலீஸ்

சென்னையில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திமுக பிரமுகர் கொலை வழக்கு...தலைமறைவாக இருந்த ரவுடியை கைது செய்த போலீஸ்

சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். 102 -வது வட்ட திமுக அவைத்தலைவரான இவர், கடந்த ஆகஸ்டு மதம் 18-ம் தேதி இரவு அண்ணா நகர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கும்பல்  சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த கொலை தொடர்பாக அண்ணா நகர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக கீழ்பாக்கத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன் குமார், விநாயகம், கற்பகம், பாலாஜி, அமிர்தம்  ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இன்பார்மராக இருந்து வந்த சம்பத்குமார், கடந்த சில நாட்களுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பதுங்கி இருந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்க அவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவுடியின் உறவினர்கள் சம்பத் குமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி லெனின் என்பவரை அண்ணாநகர் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ரவுடி லெனின் மீது காஞ்சிபுரத்தில் 4 கொலை வழக்குகள் உள்பட 13 வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவரது கூட்டாளிகள் 2 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.