வேலை பார்த்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் சுருட்டல் : தலைமறைவானவரை வளைத்துப்பிடித்த காவல்துறை !!

வேலை பார்த்த நிறுவனத்தில் கையாடல் செய்த 5 கோடி பணத்தில் நிலங்களை வாங்கி குவித்த வழக்கில் இரண்டு வருடங்களாக தலைமறைவாகி இருந்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலை பார்த்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் சுருட்டல் : தலைமறைவானவரை வளைத்துப்பிடித்த காவல்துறை !!

தனியார் நிறுவனம்

சென்னை அமைந்தகரையில் ரீச் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமர் ரஹ்மான் என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையாடல் புகார் ஒன்றை அளித்தார்.

படிப்படியாக பதவி உயர்வு

அந்த புகாரில் தனது நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் மற்றும் கலீல் ரகுமான் ஆகியோர் பணிக்கு சேர்ந்ததாகவும் பின்னர் இவர்கள் படிப்படியாக உயர்ந்து நிறுவனத்தின் இயக்குனராக கார்த்திக் மற்றும் மேலாளராக கலீல் ரகுமான் பதவி உயர்வு பெற்றனர். வியாபார ரீதியாக தான் அடிக்கடி வெளிநாட்டிற்கு செல்வதால் நிறுவனத்தின் காசோலைகள் மற்றும் பண பரிவர்த்தனைகளை கார்த்திக் மற்றும் கலீல் இடம் கவனித்து கொள்ளுமாறு கூறிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

கையாடல்

இதனையடுத்து நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆடிட்டர் சரிபார்த்த போது நிறுவனத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் நடந்திருப்பது தெரிய வந்ததாகவும், நிறுவனத்தின் இயக்குனரான கார்த்திக் மற்றும் மேலாளர் ஆன கலீல் ரகுமான் ஆகியோர் இணைந்து கடந்த 10 ஆண்டுகளில் 5 கோடியே 85 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்திருப்பது தெரியவந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

தலைமறைவு

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரேவதி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை செய்து முக்கிய நபரான கார்த்திகை கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். குறிப்பாக நிறுவனத்தின் வங்கி கணக்குகளை இருவரும் கவனித்து வந்ததால் நிறுவன வங்கி கணக்கிலிருந்து ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் எடுத்தது தெரிய வந்தது. மேலும் கையாடல் செய்த பணத்திற்கு உண்டான போலியான ஆவணங்களை தயாரித்து கணக்கு காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

வளைத்துப்பிடித்த காவல்துறை

இதனையடுத்து  கடந்த இரண்டு வருடங்களாக தலைமறைவான கலீல் ரகுமானை தமிழகம் முழுவதும் தேடிய  மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று பிராட்வேயில் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் கையாடல் செய்த பணத்தில் கார்த்திக்கும், கலீல் ரகுமான் நிலங்களை வாங்கிப் போட்டுள்ளது தெரியவந்துள்ளது. கார்த்திக் வாங்கிய இரண்டு இடங்கள் மற்றும் கலீல் ரகுமான் உடைய ஒரு இடம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் கலீல் ரகுமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.