பப்ஜி மதன் மீது இ-மெயிலில் தமிழகம் முழுவதிலும் இருந்து குவியும் புகார்கள்... இதுவரை 100க்கும் மேற்பட்டார் மெயில்

யூடியூபில் ஆபாசமாக பேசி கைதான மதன் மீது மேலும் 100க்கும் மேற்பட்டோர் பணத்தை பறிகொடுத்ததாக புகார் கொடுத்துள்ள நிலையில் மதன் மீதான விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.  

பப்ஜி மதன் மீது இ-மெயிலில் தமிழகம் முழுவதிலும் இருந்து குவியும் புகார்கள்... இதுவரை 100க்கும் மேற்பட்டார் மெயில்

யூடியூபில் பப்ஜி சொல்லிக் கொடுப்பது போல ஆபாசமாக பேசி பணத்தை குவித்து வந்தவர் பப்ஜி மதன். இவருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு  புகார்கள் குவிந்ததையடுத்து, போலீசார் மதன் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். அதில், இவரும் இவரது மனைவி கிருத்திகாவும் இணைந்து யூடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்ததும் இவர்களுக்கு ஒரு சில தோழிகள் உதவி செய்ததும் தெரியவந்தது.

 அதனடிப்படையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் மதனின் யூடியூபில் பக்கத்தை நிர்வகித்த அவரின் மனைவி கிருத்திகாவை கைது செய்துள்ளனர்.மேலும் கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில் மதனிடம் ஆபாசமாக பேசிய பெண்ணாக அவரது மனைவியே இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து தலைமறைவாக இருந்த மாதனை தர்மபுரியில் கைது செய்து காவல்துறையினர், சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 இந்த நிலையில் நீதிமன்றத்தில் மதனை ஆஜர்படுத்துவதற்கு முன்னர், அவரிடம் விடிய விடிய சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆபாசமாக பேசி கோடிக்கணக்கில் மதன் சம்பாதித்ததும் ஆடி கார்கள், பங்களாக்கள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறி பண மோசடி செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

 பப்ஜி மதனிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் dcpccb1@gmail.com என்ற இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் கொடுத்த இ-மெயில் முகவரியில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆபாச பேச்சு பற்றி கண்டித்தும் பலமுறை திட்டியதாகவும் புகார்கள் குவிந்துள்ளன என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். பப்ஜி மதனை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.