சக மாணவனின் வாட்சப் டிபி-யில் "அம்பேத்கர்"... மாணவர்களுக்குள் கலவரம்!!

சக மாணவனின் வாட்சப் டிபி-யில் "அம்பேத்கர்"... மாணவர்களுக்குள் கலவரம்!!

நாங்குநேரி சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள், ராணிப்பேட்டை அருகே அம்பேத்கர் புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யில் வைத்தது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடையே கலவரம் உருவாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஜம்புகுளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த கல்லூரியானது கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கல்லூரியில் பயின்று வந்த முதலாம் ஆண்டு மாணவர்களிடையே அடிக்கடி வாய்த் தகராறு எழுநதுள்ளது. இவர்களில் ஒரு தரப்பு மாணவன் தனது செல்போனில் சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்துள்ளார். 

இதனை பார்த்த மற்றொரு தரப்பு மாணவர்கள், டி.பி.யை ரிமூவ் செய்ய கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அம்பேத்கர் டி.பி. தொடர்பாக இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு எழுந்து நாளடைவில் முற்றிப் போனது. 

இந்த நிலையில் அம்பேத்கர் படத்தை நீக்க கோரிய மாணவர்கள், ஊர் நண்பர்களை அழைத்துக் கொண்டு 22-ம் தேதியன்று கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை கண்ட பிற மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சாதி மதம் இவைகளை கூறிக் கொண்டு கல்லூரிக்குள் நுழையக் கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் உண்டானது. சாதியின் பெயரைச் சொல்லி எங்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவதா? என ஆவேசமடைந்த மாணவர்கள், கல்லூரிக்குள் நுழைந்த கும்பலை சரமாரியாக அடித்து விரட்டினர். இந்த சம்பவம் குறித்து ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த சோளிங்கர் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் 8 பேரை அழைத்து விசாரித்து விட்டு விடுவித்தனர். 

மேலும் கல்லூரிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சென்று பார்வையிட்டு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். சக மாணவன் தனது வாட்ஸ் அப்பில் அம்பேத்கர் புகைப்படத்தை வைத்தான் என்பதற்காக நடந்த இந்த கலவர சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபகாலமாக சாதி என்ற கள்ளிச்செடி பள்ளி மாணவர்களை தீண்டி சமுதாயத்தையே குருதிக்களமாக மாற்றி வருகிறது. 

இதையும் படிக்க || Youtube கண்டு பிரசவம் பார்த்த கணவர்...மனைவி உயிரிழப்பு!!