பிரபல கஞ்சா வியாபாரி கொலை!

பிரபல ரௌடியின் தாய்மாமனை, கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக திட்டமிட்டு எதிர்கும்பல் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கஞ்சா வியாபாரி கொலை!

பிரபல ரவுடியின் தாய் மாமனை கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட போட்டி காரணமாக எதிர் கோஷ்டியினர் திட்டமிட்டு வெட்டி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்றொரு வழக்கில் பிரபல ரவுடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சமயம் பார்த்து அவனுக்கு கஞ்சா விற்பனையில் உறுதுணையாக இருந்த தாய் மாமனை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கஞ்சா விற்பனைப் போட்டியில் கொலை நடைபெற்றது தெரியவந்தது.

சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (49). ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்த இவர் நேற்று பாரதி சாலை விக்டோரியா மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த போது, முககவசம் அணிந்து வந்த மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மனைவியின் கண்முன்னே நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இக்கொலை சம்பவம் தொடர்பாக ஜாம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குறிப்பாக கொலைச் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி  ராஜாவை கொலை செய்த திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சூர்யா, தேவா, வைதீஸ்வரன், விக்னேஷ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனைப் போட்டியில் கொலை நடந்தது தெரியவந்தது. குறிப்பாக ஜாம் பஜார் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி வினோத் () மாட்டாங்குப்பம் வினோதின் தாய் மாமனான ராஜா சிறைக்குச் செல்லும் வினோத்-ஐ ஜாமினில் எடுப்பது, கஞ்சாவை ஆட்டோவில் வைத்து டெலிவரி செய்வது போன்றவற்றை செய்து வினோதுக்கு கஞ்சா விற்பனையில் உறுதுணையாக இருந்து வந்ததுள்ளார்.

சமீபத்தில் தாய் மாமனான ராஜாவின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் மாட்டாங்குப்பம் வினோத், பாலாஜி உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனால் வினோதின் கஞ்சா விற்பனை விவகாரங்களை தாய் மாமாவான ராஜா நடத்தி வந்துள்ளார். அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வரும் எதிர் கோஷ்டியினரான சிட்டி சேகர் மற்றும் அவனது மகன்களான சூர்யா, தேவா ஆகியோருக்கு ராஜா கஞ்சா விற்பனையை நடத்தி வருவது இடைஞ்சலாக இருந்து வந்ததால் இரு தரப்பினருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மாட்டாங்குப்பம் வினோத் சிறையில் உள்ள சமயத்தை பயன்படுத்தி ராஜாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு நேற்று சூர்யா, தேவா ஆகியோர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜாவை வெட்டி படுகொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் இதே கும்பல் அரும்பாக்கத்தில் கஞ்சா வாங்க வந்த இருவரை வெட்டிவிட்டு பின்னர் கஞ்சா போதையில் திட்டமிட்டு கஞ்சா வியாபாரியான ராஜாவை கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது.

ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்( 25) மற்றும் ஸ்ரீரஞ்சன்(19) ஆகியோர் கஞ்சா வியாபாரியான சூர்யாவின் கூட்டாளி அமர் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கஞ்சா கேட்டு தர மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வாட்ஸ் ஆப் மூலம் தனுஷ் அஜித் குமாருக்கு 5 கத்தி படங்களை அனுப்பி இதில் எந்த கத்தியால் சாக விரும்புகிறாய் எனக்கேட்டு உசுப்பேற்றி அரும்பாக்கம் பகுதிக்கு நேரில் வரவழைத்து சூர்யா, தேவா, அமர், தனுஷ் ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து அஜித் குமார் மற்றும் ஸ்ரீரஞ்சன் ஆகியோரை ஓட ஓட வெட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது.

அஜித் குமார் மற்றும் ஸ்ரீரஞ்சன் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜாம்பஜார் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சூர்யா, தேவா உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.