முதலமைச்சர் மருமகன் தெரியுமா?- சுமார் 77 லட்சம் மோசடி செய்த அவலம்...

தமிழக முதலமைச்சர் மருமகன் பெயரை பயன்படுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி 77 லட்சம் மோசடி செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மருமகன் தெரியுமா?- சுமார் 77 லட்சம் மோசடி செய்த அவலம்...
Published on
Updated on
2 min read

திருப்புத்தூர் : நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் ஊராட்சி மன்ற தலைவராகவும், கடந்த 10 வருடமாக அதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி பாரதியிடம் 77 லட்ச ரூபாய் பெற்று புவனேஷ் என்கிற சரவணன் மற்றும் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட போலி ஐஏஎஸ் சசிகுமார் ஆகியோர் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக பாரதி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாரதி, திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு  ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதாகவும், ஏற்கனவே திமுகவில் எம் எல் ஏ சீட்டு கேட்டு முயற்சி செய்த போது கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். அதன் பிறகு வேலூர் மாவட்டத்தில் ஹோட்டல் நடத்திவரும் அதிமுகவை சேர்ந்த பாலச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதன் அவர் மூலமாக புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் அறிமுகமானதாகவும், அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி காலியாக இருப்பதாகவும், அதனை உங்களுக்கு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, இந்த பதவி வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் செலவாகும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இதனை ஒப்புக்கொண்டு 34 லட்ச ரூபாயை சென்னை ஹோட்டலில் வைத்து புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமியிடம் கொடுத்ததாகவும், இதற்கிடையே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியை வாங்கி தரப்போவதாக ஐஏஎஸ் சசிகுமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்து அவரை டெல்லியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் சந்தித்து ஒரு தொகை கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மொத்தம் 77 லட்சம் ரூபாய் கொடுக்கப் பட்டதாகவும், மேலும் தமிழக முதல்வரின் மருமகன் தான் பதவி போட இருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். மேலும் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் பாண்டிச்சேரி முதலமைச்சரின் புகைப்படம் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்ததாகவும் அவர் கூறினார். 

பல மாதங்களாக பதவி கிடைக்காமல் இழுத்தடித்து வந்ததால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது பணம் தர முடியாது என புவனேஷ் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அதன் பிறகு விசாரித்த போது சசிகுமார் போலி ஐ.ஏ.எஸ் மோசடி வழக்கில் சிறையில் இருப்பதும் தனக்கு தெரியவந்ததாக அவர் கூறினார்.

இதனால் உடனடியாக பணத்தை மீட்டு கொடுக்கும் படி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக அவர் கூறினார். ஏற்கனவே சசிகுமார் ரயில்வே, அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com