சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி மனு...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி, மாரடைப்பால்  சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில்  சி.பி.சி.ஐ.டி மனு...

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறியிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதால், செங்கல்பட்டு சிறையில் சிவசங்கர் பாபா அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென அவருக்கு  மூச்சு திணறல்  ஏற்பட்டதையடுத்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார்.  

ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா கொண்டு வரப்பட்டார். இதையடுத்து  அவரை  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து  சிகிச்சை  அளிக்கப்பட்டு வரும் நிலையில்  சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.