சாலையில் நிறுத்திய கார் கண்ணாடிகளை உடைத்த குடிமகன்கள்: வெளியானது சிசிடிவி காட்சி!  

சென்னை கே.கே நகரில் நள்ளிரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சாலையில் நிறுத்திய கார் கண்ணாடிகளை உடைத்த குடிமகன்கள்: வெளியானது சிசிடிவி காட்சி!   

சென்னை கே.கே நகர் 10வது செக்டாரில் உள்ள 60 ஆவது தெரு, 61வது தெரு மற்றும் 63 வது தெரு ஆகிய 3 தெருக்களில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், ஆட்டோர், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் கண்ணாடிகளை நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், சாலைகளில் இரண்டடி நீளமுள்ள கத்தியுடன் இந்த கும்பல் வலம் வந்ததால் இப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

நள்ளிரவில் வீட்டில் ஜன்னல் வழியாக இதைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டு உள்ளனர். இது குறித்த தகவல் கிடைத்த கே.கே நகர் போலீசார் இன்று காலை சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தபோது அதில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த 3 பேர் கொண்ட கும்பல் ஒரு இருசக்கர வாகனத்தில் வலம் வருவது பதிவாகி உள்ளது.

மேலும், கத்தியுடன் சாலைகளில் நடந்து செல்வதும் தெளிவாக பதிவாகி இருந்தது. உடனடியாக இது குறித்து சம்பவ இடத்திற்கு தியாகராய நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், போலீசாரின் விசாரணையில் இதே கும்பல் விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு அடித்து நொறுக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்த ஒருவர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதன் பின்னர் வளசரவாக்கத்திற்க்கு சென்ற இந்த கும்பல் அங்கும் இதே போன்று அட்டுழியத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் துரித உணவகத்தில் வேலை பார்க்கும் ஒருவரையும் சரமாரியாக வெட்டி அவர் படுகாயத்துடன் 12 தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திருட்டு ராஜேஷ், ஆதி உள்ளிட்ட 3 பேர்தான் இச்சமவத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திருட்டு ராஜேஷ் மற்றும் ஆதி ஆகியோர் அடங்கிய இந்த கும்பல் கஞ்சா உட்கொண்டு போதையில் இதில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.