நடுரோட்டில் மது அருந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்... தட்டிக்கேட்ட போலீஸ் மீது கல்வீசி தாக்கிய 3 பேர் கைது...

சென்னையில் நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு நடு ரோட்டில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய காவலர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடுரோட்டில் மது அருந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்... தட்டிக்கேட்ட போலீஸ் மீது கல்வீசி தாக்கிய 3 பேர் கைது...

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் 1வது தெரு சந்திப்பில் கொடுங்கையூர் காவல் நிலைய தலைமைக் காகலர் சக்திவேல் முருகன் மற்றும் ஓட்டுநர்  காவலர் சரத் குமார் ஆகியோர் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் நடு ரோட்டில் மது அருந்தியதால் அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த அக்கும்பலில் சிலர் காவலர்களை நோக்கியும், ரோந்து வாகனத்தை நோக்கியும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உடனடியாக பின்வாங்கிய காவலர்கள் கொடுங்கையூர் காவல் நிலையத்திலுள்ள சக காவலர்களுக்கு தகவல் தெரிவித்து பின் அப்பகுதிக்கு மீண்டும் சென்று கல்வீச்சில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் மார்டின் (24), ஜான் ஆல்வின் (23) மற்றும் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கலைச் செல்வன் (27) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.