மூன்று மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்துக் கொன்று விட்டு தப்பியோடிய பாட்டி...

கோவையில் மூன்று மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்துக் கொன்று விட்டு, பேத்தியை கொலை செய்ய முயற்சி செய்த பாட்டியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூன்று மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்துக் கொன்று விட்டு தப்பியோடிய பாட்டி...

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்தது.   ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி இவர்களுடன் தங்கி   கடந்த 2 மாதங்களாக குழந்தைகளை கவனித்து வந்ததாக தெரிகிறது.. இந்த நிலையில்  ஐஸ்வர்யா தனது குழந்தைகளுக்கு மருந்து வாங்குவதற்காக அருகில் இருக்கும் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, குழந்தைகளை யாரோ எடுத்து சென்று விட்டதாக சாந்தி கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ந்து போன ஐஸ்வர்யா உள்ளே சென்று  பார்த்த போது படுக்கை அறையில்  பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு  ஆண் குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை கண்டு கதறி துடித்த ஐஸ்வர்யா, பெண் குழந்தையை தேடிய போது துணியால் சுற்றப்பட்டு கழிப்பறையில் மயக்க நிலையில் கிடந்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தும், மயக்க நிலையில் இருந்த பெண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த சம்பவம் குறித்து துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் சாந்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.எனினும் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றுவிட்டு தலைமறைவான  சாந்தியை  காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.