சென்ட்ரல் வங்கியில் பலே மோசடி.. ரூ. 68 லட்சத்தை அபேஸ் செய்து 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீஸ்

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்து சுமார் 68 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த நகை மதிப்பீட்டாளரை 3 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்ட்ரல் வங்கியில் பலே மோசடி.. ரூ. 68 லட்சத்தை அபேஸ் செய்து 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீஸ்

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள  சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் கடந்த 2018 ம் ஆண்டு போலிநகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

சலீவன் வீதி பகுதியை சேர்ந்த கார்த்திக்  என்பவர் நகை மதிப்பீட்டாளராக அந்த வங்கியில்  பணிபுரிந்த போது, வங்கியின் ஸ்டிராங் ரூமில் இருந்த 3819 கிராம் நகைகளுக்கு பதிலாக போலி் நகைகளை வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது. 

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன் மீது வழக்கு பதிவு செய்ய பட்டத்தை அறிந்த கார்த்திக் தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நகை மதிப்பீட்டாளர் கார்த்திக் கோவை பகுதிக்கு வந்திருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் இன்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடி செய்து விட்டு மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கார்த்திக் போலீசாரிடம் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.