கஞ்சா போதையில் கடையை உடைக்கும் ஆசாமிகள் :  பொருட்களை இலவசமாக கேட்டு அட்டூழியம் !!

சென்னையில் இலவசமாக பொருட்களைக் கேட்டு கஞ்சா ஆசாமிகள் கடை உரிமையாளரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஞ்சா போதையில் கடையை உடைக்கும் ஆசாமிகள் :  பொருட்களை இலவசமாக கேட்டு அட்டூழியம் !!

தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆப்ரேஷன் மூலமாக போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை புழக்கத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மாநில கல்லூரி வளாகத்திற்குள்ளே மூன்று கல்லூரி மாணவர்கள் கஞ்சா புகைப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் உள்ள பெட்டிக்கடையில் கஞ்சா போதையில் இரு இளைஞர்கள் கடைக்காரரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஞ்சா போதையில் இரு இளைஞர்கள் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தராமல் கடையின் உரிமையாளரை மிரட்டி வருகின்றனர். மேலும் அந்த இளைஞர்கள் போலீசாரை ஆபாசமாக திட்டியும் உள்ளனர். 

பின்னர் கடையின் உரிமையாளரான பைசல் ரஹ்மானை இரு இளைஞர்களும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த பைசல் ரஹ்மான் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல அப்பகுதி முழுவதும் போதை ஆசாமிகள் மிரட்டி வருவதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.