மனைவியை பிரிந்து வாழும் கணவன்...இரு பெண் குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி!

மனைவியை பிரிந்து வாழும் கணவன்...இரு பெண் குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி!

சென்னையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழும் கணவன் தனது இரு பெண் குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை பிரிந்த கணவன்:

சென்னை சேப்பாக்கம் லால் முகமது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவருக்கும் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு 6 வயது மற்றும் 4 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும், குடும்ப பிரச்சனை காரணமாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விஜயகுமார் கவிதாவைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

தற்கொலை முயற்சி:

இதையடுத்து, இரு பெண் குழந்தைகளும் தாயுடன் பொழிச்சலூரில் வசித்து வரும் நிலையில், இரு வாரத்திற்கு ஒரு முறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜயகுமார் தனது இரு குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து மீண்டும் திங்கள் அன்று தாயிடம் கொண்டு விடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதையும் படிக்க: ஆதார் இணைப்பு: லஞ்சம் வாங்கினால்...அதிகாரிகளை எச்சரித்த மின்வாரியம்...!

அதேபோல், கடந்த வெள்ளிக்கிழமையன்று விஜயகுமார் பொழிச்சலூரில் இருந்து தனது இரு குழந்தைகளையும் சேப்பாக்கம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் மன நோயாளிகளுக்கு அளிக்கும் Alprazolam 0.5 mg மாத்திரைகளையும், கரப்பான் பூச்சி மருந்தையும் பாலில் கலந்து குழந்தைகளுக்கும் கொடுத்து, தானும் அருந்தியுள்ளார். இதனால் 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜயகுமாரின் தந்தை ராமசந்திரன், 108 ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

தீவிர சிகிச்சை:

மருத்துவமனையில் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், விஜய்குமார் குடிபோதைக்கு அடிமையானவர் எனவும், பலமுறை குடித்துவிட்டு அப்பகுதியில் தகராறில் ஈடுபடுவது வழக்கம் எனவும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.