கூட்ட நெரிசலில் பஸ்ஸில் இளம் பெண்களின் கைவரிசை !!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் ரூ.10 ஆயிரத்தை திருடிய 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். 

கூட்ட நெரிசலில் பஸ்ஸில் இளம் பெண்களின் கைவரிசை !!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த பால்சாமி என்பவரின் மனைவி முத்துலட்சுமி (வயது 52). இவர் கடந்த மாதம் 30ந் தேதி விளாத்திகுளத்திலிருந்து கோவில்பட்டி செல்வதற்காக விளாத்திகுளம் பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து கோவில்பட்டி செல்வதற்கு வந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறினர். அப்போது முத்துலட்சுமியும், பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏறியுள்ளார். 

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர்கள் முத்துலட்சுமி வைத்திருந்த ரூ.10ஆயிரம் பணப்பையை திருடிக் கொண்டு தப்பி சென்றனர். பஸ்சிற்குள் சென்ற சிறிது நேரத்தில் பணப்பை திருடப்பட்டதை அறிந்த அவர், விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான காட்சிகளில் முத்துலட்சுமி பஸ்சில் ஏறும்போது, அவரை பின் தொடர்ந்து கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 2 இளம்பெண்கள் பணப்பையை திருடியது தெரிய வந்துள்ளது. 2 இளம்பெண்கள் கைது அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், முத்துலட்சுமியின் பணப்பையை திருடியது தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த சத்யா (வயது 35) மற்றும் சந்தனமாரி (22) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த 2 இளம்பெண்களையும் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட 2பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.