பெண்களை காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றிய நபர் : பெண்ணின் தற்கொலை வழக்கில் திருப்பம் !!

பெண்களை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின் செல்போனை பிளாக் செய்து தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்திருந்த மதுமோகன்

பெண்களை காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றிய நபர் : பெண்ணின் தற்கொலை வழக்கில் திருப்பம் !!

ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவி

சென்னை வளசரவாக்கம் பழனி நகரைச் சேர்ந்தவர் ஹரிதா ராஜேஷ்வரி(25). இவர் கல்லூரி முடித்துவிட்டு  ஐ.ஏ.எஸ். மற்றும்  ஐ.பி.எஸ். ஆக பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார். மேலும் ஹரிதா வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் வந்தார். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி ஹரிதா திடீரென வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலையில் சந்தேகம்

இந்த தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி ஹரிதாவின் தந்தை ராமகிருஷ்ணன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். குறிப்பாக உயிரிழந்த ஹரிதாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி சைபர் ஆய்வக கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹரிதாவிற்கு டைரி எழுதும் பழக்கம் இருந்ததால் அதை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். 

மயக்கிய மதுமோகன்

அப்போது விசாரணையில் உயிரிழந்த ஹரிதா கடந்த இரண்டு ஆண்டுகளாக அரும்பாக்கத்தை சேர்ந்த மதுமோகன் (35) என்பவரை காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மதுமோகன் பல முறை ஹரிதாவிடம் உடலுறவு வைத்துக்கொண்டதும் தெரியவந்தது.

வலுக்கட்டாய கருக்கலைப்பு

இதனால் கருவுற்ற ஹரிதாவிடம் வலுக்கட்டாயமாக மதுமோகன் மாத்திரை கொடுத்து கருவை கலைத்துவிட்டு, ஹரிதாவை செல்போனில் பிளாக் செய்து தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த ஹரிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மதுமோகன் மீது தற்கொலைக்கு தூண்டுதல், விருப்பமில்லாத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதுமோகனிடம் நடத்திய விசாரணையில் அரும்பாக்கம் வினாயகபுரம் பகுதியை சேர்ந்த மதுமோகன்(35) டிரேடிங் தொழில் செய்து வருவதும், தொழில் சம்பந்தமாக வெளிநாட்டிற்கு செல்லும் மதுமோகன் பல விதங்களில் புகைப்படம் எடுத்து  பெண்களுக்கு அனுப்பி காதல் வலையில் விழ வைப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

ஏமாந்த பெண்கள்

இதே போல மதுமோகன் 5-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துவிட்டு, பின் செல்போனை பிளாக் செய்து தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மதுமோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.