மதம்மாற சொன்னதாக மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் புதிய திருப்பம்!! வெளியானது மற்றொரு வீடியோ

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்போது புதிதாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதம்மாற சொன்னதாக  மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் புதிய திருப்பம்!! வெளியானது மற்றொரு வீடியோ

மாணவி விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது பேசிய வீடியோ ஒன்று தற்போது புதிதாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் மாணவி விடுதியில் எட்டாம் வகுப்பிலிருந்து தங்கி படிப்பதாகவும், நான்கு ஆண்டுகளாக முதல் மதிப்பெண் எடுத்த நிலையில், கடைசி ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு தாமதமாக சென்றதாகவும், ஹாஸ்டலில் உள்ள சிஸ்டர் சகாயமேரி கணக்கு வழக்கு பார்க்க சொல்லியதாகவும், தாமதமாக வந்ததால் கணக்கு வழக்கு தனக்கு புரியாது எனவும், பிறகு எழுதி தரன்னு தெரிவித்தும்,  கணக்கு வழக்கு பார்த்து விட்டு பிறகு உன் வேலையை பாரு என்று தெரிவித்ததாக மாணவி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் கணக்கு வழக்கு சரியாக எழுதி கொடுத்தபோதும் தப்பா இருக்கு என சொல்லி தொடர்ந்து ஒரு மணி நேரம் உட்கார வைத்து விடுவார்கள் இதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. இதனால் 12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்து விடும் என நினைத்து விஷம் குடித்ததாக மாணவி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வீடியோ எடுத்த நபர் பொட்டு வைக்கக்கூடாது என்று ஹாஸ்டலில் உள்ளவர்கள் எதாவது தெரிவித்தார்களா என கேட்டபோது அதற்கு மாணவி அப்படி எல்லாம் எதுவும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்தில் வேறு யாரேனும் உன்னை தொந்தரவு செய்தார்களா என கேட்டபோது அதற்கு மாணவி இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஏற்கனவே மதம் மாறச் சொன்னதால் தான் நான் விஷமருந்தினேன் என மாணவி சொன்னதுபோல் ஒரு வீடியோ வெளியான நிலையில், தற்போது அதற்கு மாறாக மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது மாணவி தற்கொலையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.