என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கொள்ளையடித்த வழக்கு..! 9 பேரை கைது செய்த போலீசார்...!

என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கொள்ளையடித்த வழக்கு..! 9 பேரை கைது செய்த போலீசார்...!
Published on
Updated on
2 min read

என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கொள்ளையடித்த வழக்கில்  9 பேரை போலீசார் கைது செய்ததுடன் 1 கோடியே 65 லட்சத்தை மீட்டுள்ளனர்.

டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை முத்தையால்பேட்டை காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ஜமால் என்பவரின் வீடு மற்றும் செல்போன் கடையில் என்.ஐ ஏ அதிகாரிகள் எனக் கூறி 10க்கும் மேற்ப்பட்டோர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜமாலிடமிருந்து 20 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளதாகவும் ஜமால் இதுகுறித்து விசாரணை செய்த போது போலி என்.ஐ.ஏ அதிகாரிகள் என தெரிய வந்து, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக என் ஐ ஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருவதை இந்த கும்பல் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிகாரிகள் போல் நடித்து பணம் கொள்ளை அடித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையிலான தனிப்படை அமைத்து, அந்த போலி கும்பலை தேடி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகியான வேலு என்கிற வேங்கை வேந்தன் உட்பட ஆறு பேர் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் கிண்டி குதிரைப் பந்தயத்தில் இழந்த பணத்தை பெறுவதற்கு, இதுபோன்று திட்டமிட்டு கொள்ளை நிகழ்த்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் 2 கோடியே 10 லட்சம் அளவில் கொள்ளையடித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த பணத்தை குகை ஒன்றில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்த கும்பலுக்கு பின்புலமாக செயல்படுபவர்கள் யார், 2 கோடி ரூபாய் பணத்தை எங்கே வைத்துள்ளார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை  நீதிமன்றத்தில் நடந்த போது பாஜக நிர்வாகி வேலு உள்ளிட்ட ஆறு பேரையும் 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் கொள்ளை கும்பலில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் மண்ணடியில் ஜிம் பயிற்சியாளராக இருக்கும் முகமது பாசில் என்பவர் கொள்ளைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர் பணத்தை மறைத்து வைத்ததாகவும் அவரிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து காவலில் எடுத்த ஆறு பேரையும் தீவிரமாக விசாரித்து, கொள்ளையடிக்க மூளையாக செயல்பட்ட சித்திக் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சித்திக், புகார்தாரர் ஜமாலின் செல்போன் கடையில் பணியாற்றி வருவதும், ஜமாலிடம் அதிகமான பணம் புழங்குவதாக பாஜக நிர்வாகி வேலுவிடம் தெரிவித்து கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஜமால் காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி செல்லும் இடங்களையெல்லாம் கொள்ளையர்களுக்கு தகவல் அளித்து தப்பிக்க வழிவகை செய்ததும் தெரியவந்துள்ளது. 

மேலும், மீதமுள்ள பணத்தை மீட்க போலீசார் விசாரணை நடத்திய சூழ்நிலையில் சித்திக்கின் சகோதரர் அலி என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மீட்கப்பட்ட பணம் ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை 1 கோடியே 65 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தவுடன் 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் இன்னும் 3 குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com