300 கிலோ எடை கொண்ட கடல் பசு.. கூறு போட்டு விற்க முயன்ற மீனவர்கள்.. அண்ணன் கைது, தம்பிக்கு வலைவீச்சு!!

ராமநாதபுரம் அருகே வலையில் சிக்கிய கடல் பசுவை கூறு போட்டு விற்க முயன்ற மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

300 கிலோ எடை கொண்ட கடல் பசு.. கூறு போட்டு விற்க முயன்ற மீனவர்கள்..  அண்ணன் கைது, தம்பிக்கு வலைவீச்சு!!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் வலையில் சிக்கிய 300 கிலோ எடை கொண்ட கடல் பசுவை வெட்டி கூறுபோட்டு விற்பனை செய்வதாக இராமநாதபுரம் வன உயிரின வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் ஜெபஸ் தலைமையிலான வனத்துறையினர் தொண்டி-எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சோதனையிட்டபோது 2 மீனவர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளனர்.

அப்போது ஒரு மீனவரை விரட்டிப் பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபர் நம்புதாளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான ராக்கப்பன் என்பதும், தப்பியோடி தலைமறைவான நபர் அவருடைய சகோதரர் 25 வயதான பழனி என்பதும் இவர்கள் இருவரும் ஒரு பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது 300 கிலோ எடை கொண்ட கடல் பசு வலையில் சிக்கியதாகவும், அதனை கரைக்கு கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் தொண்டி பகுதியில் அந்தக் கடல் பசுவை இறைச்சிக்காக வெட்டிக் கூறு போட்டு விற்பனை செய்ய முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு வனத்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தெர்மாகோல் பெட்டியில் இருந்த கடல் பசுவின் இறைச்சியையும், பைபர் படகையும் பறிமுதல் செய்ததுடன் ராக்கப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மீனவர் பழனியை வலைவீசி தேடி வருகின்றனர்.