"கூட்டுறவு வங்கியில் 90 சவரன் நகைகள் மாயம்" அதிகாரி கைது !

"கூட்டுறவு வங்கியில் 90 சவரன் நகைகள் மாயம்" அதிகாரி கைது !

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 90 சவரன் நகைகளை திருடிய வழக்கில் வங்கியின் பொறுப்பு அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள விவசாய கூட்டுறவு வங்கியின் மேலாளர் எம்பெருமாள், இவரிடம் வந்த வாடிக்கையாளர் சிலர் தாங்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க வந்த போது வங்கியின் பொறுப்பு அதிகாரி கதிரவன் நகைகளை தராமல் அலகழித்து வருவதாக தெரிவித்தனர். 

இதனை அடுத்து எம்பெருமாள் வங்கி லாக்கர்க்கு சென்று கணக்கு பார்த்த போது சுமார் 90 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது வங்கியில் லாக்கரில் இருந்த நகைகளை திருடியது பொறுப்பு அதிகாரியான கதிரவன் என தெரியவந்ததை தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் முதற்கட்ட விசாரணையில் கதிரவன் சீட் ஏலம் நடத்தி வந்ததாகவும் அதில் நஷ்டம் ஏற்பட சீட் எடுத்தவர்களுக்கு பணம் தர தான் பணிபுரிந்த வங்கியில் இருந்த நகைகள் சிலவற்றை விற்றும் சிலவற்றை கடையில் அடகு வைத்து சீட்டு பணம் கொடுத்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் நகைகளை விற்று மற்றும் அடகு வைத்த இடங்களில் இருந்து நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.