54 கிலோ கஞ்சா... பத்து வருசம் சிறை தண்டனை..!

54 கிலோ கஞ்சா... பத்து வருசம் சிறை தண்டனை..!

ஆந்திராவில் இருந்து, சென்னை வழியாக, மதுரைக்கு ரயில் மூலம் 54 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இரண்டு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, கடந்த 2019 டிசம்பர் 21ம் தேதி சென்னை எழூம்பூர் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் 'சர்கார் எக்ஸ்பிரஸ்' ரயிலில் இருந்து இறங்கிய நான்கு பேரை சோதனையிட்டதில், 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்தி வந்த திண்டுக்கலை சேர்ந்த ராம்குமார், மதுரையைச் சேர்ந்த ராமராஜ், யுவராஜா, பிரகாஷ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க | பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம்...

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, ராம்குமார், ராமராஜ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், யுவராஜ், பிரகாஷ் ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டு சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.