41 சவரன் நகைகள், ரூ.1.08 லட்சம் பணம் கொள்ளை.. அடுத்தடுத்து 4 இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை!!

எடப்பாடி அருகே அடுத்தடுத்து 4 இடங்களில் 41 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

41 சவரன் நகைகள், ரூ.1.08 லட்சம் பணம் கொள்ளை..  அடுத்தடுத்து 4 இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன்.  இவரது வீட்டின் பூட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோல் வெள்ளக்கவுண்டனூர் பகுதியில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஜோதி என்ற பெண் கழுத்தில் இருந்த 10 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பிள்ளுக்குறிச்சி பகுதியில் வசிக்கும் சீரங்கன் - பழனியம்மாள் தம்பதியை மர்ம நபர்கள் மிரட்டி 8 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.  

மேலும், வெள்ளக்கவுண்டனூர் பகுதியில் விவேக் என்பவரது இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற போது, அவர் சுதாரித்துக் கொண்டு கொள்ளையர்களை விரட்டியதால் அவர்கள் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். 

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.