உணவு டெலிவரி செய்ய சென்ற ஊழியரை... பட்டியலினத்தவர் என்றுக்கூறி முகத்தில் எச்சில் துப்பிய வாடிக்கையாளர்!

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து தான் வருகிறது. தற்போது உத்திர பிரதேசத்தில்,  உணவு டெலிவரி செய்த ஸோமாட்டோ ஊழியர், பட்டியலினத்தவர் என்பதால் வாங்க மறுத்தவிட்டு ஊழியர் முகத்தில் எச்சில் துப்பி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உணவு டெலிவரி செய்ய சென்ற ஊழியரை... பட்டியலினத்தவர் என்றுக்கூறி முகத்தில் எச்சில் துப்பிய வாடிக்கையாளர்!

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என தொடர்ந்து கூறி வந்தாலும் கூட தீண்டாமை என்ற ஒன்று இந்த நவீன உலகிலும் இருக்க தான் செய்கிறது. அதை பறைசாற்றும் விதமாக உத்திர பிரதேசத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. வளர்ந்து வரும் நவீன உலகில் சமைத்து சாப்பிடுவது என்பது குறைந்து தற்போது ஆர்டர் செய்து சாப்பிடுவது ட்ரெண்டாகி விட்டது. ஆதற்காகவே பிரத்யேகமாக உள்ள உணவு டெலிவரி ஆப்கள் தான் இந்த ஸ்விக்கி,  ஸோமாட்டோ போன்றவை. இந்த ஆப்கள் மூலமாக தனக்கு பிடித்த உணவகங்களில் உணவினை ஆர்டர் செய்தால், அது தனது வீட்டு வாசலுக்கே வந்து சேர்ந்துவிடும். இதனை சரியாகவும், குறித்த நேரத்திலும் டெலிவரி செய்வதில் அதன் ஊழியர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அப்படி உணவு டெலிவரிக்கு செல்லும் போது சில வாரங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்விக்கி ஊழியர் ஒருவரை தனது ஷூவை கழற்றி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு,  கோயம்புத்தூரில் போக்குவரத்து காவல் அதிகாரியால் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியாக இவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை முன் வைத்து வர, மீண்டும் இதே போன்ற சம்பவங்கள் நடந்தேறிக்கொண்டுதான் உள்ளன.  

இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில், ஒருவர் உணவு ஆர்டர் செய்ய, அதனை வினித் குமார் என்ற ஸோமாட்டோ ஊழியர் ஏற்று, அவர் ஆர்டர் செய்த உணவுகளை பெற்றுக்கொண்டு குறித்த முகவரிக்கு வந்துள்ளார். அந்த நபரிடம், வினித் குமார் உணவை வழங்க, பதிலுக்கு அவர், உன் பெயர் என்ன, நீ எந்த ஜாதியை சேர்ந்தவர் என கேட்டுள்ளார். அதனை வினித் கூற மறுத்தாலும், வினீத்தின் ஜாதியை தெரிந்துகொண்ட அந்த நபர், வினித் பட்டியலினத்தவர் என்பதால் அவரிடம் இருந்து உணவை வாங்க மறுத்துள்ளார். அதாவது தீண்டாமை என்ற ஒரு செயல் அங்கு நடந்துள்ளது. மேலும் உணவை அங்கிருந்து கொண்டு செல்லும்படி அந்த நபர் வினித்திடம் கூறியுள்ளார். அதன் பின்னர் வினித், அப்படி என்றால் தங்களின் ஆர்டரை cancel செய்யும் படி கேட்டுள்ளார், அதற்கும் மறுத்துவிட்ட அந்த நபர், வினித் குமாரின் முகத்தில் எச்சில் துப்பியும், வீட்டில் இருந்து வெளியேற சொல்லியும் தாக்கியுள்ளார். அதோடு அவரது இரு சக்கர வாகனத்தையும் பிடுங்கி வைத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது. 

இதில் அதிர்ச்சி அடைந்த வினித், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த பின்னர் விரைந்த காவல் துறையினர், வினித் குமாரையும், அவரது வாகனத்தையும் மீட்டனர். இது தொடர்பாக வினித் குமார் காவலில் புகார் அளித்த நிலையில்,  காவல் துறையினர், எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்னர். அந்த வகையில், முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக இரு தரப்பிலும் விசாரிக்க உள்ளதாக  சொல்லப்பட்டுள்ளது. இந்த தீண்டாமை குறித்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.