சசிகலா, விஜயபாஸ்கர், மருத்துவர் மீது ஏன் விசாரணை நடத்த வேண்டும்...?

அன்றைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், தமிழ்நாடு மாநிலத்திற்கு அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை, சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு  அழைத்து செல்ல ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை ஏன்?
சசிகலா, விஜயபாஸ்கர், மருத்துவர் மீது ஏன் விசாரணை நடத்த வேண்டும்...?
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு அரசியலில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவரும் எதிர்பார்த்த ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் 2 ஆம் நாள் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சசிகலா விஜயபாஸ்கர் மற்றும் மருத்துவர் பிரதாப் ரெட்டியிடமும் விசாரணை நடத்துவதற்கு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவிடம் விசாரணை ஏன்?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், முழு நேரமும் உடனிருந்து கவனித்துக்கொண்டவர் சசிகலா தான். அப்போது, ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள லண்டன் மருத்துவர் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அவரை வெளிநாடு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட நடைபெறவில்லை எனவும் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கும் சசிகலா கூட ஏன் அவரை வெளிநாடு கொண்டு செல்ல ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்பதே? ஒரு கேள்வி குறியாக உள்ளது. ஒருவேளை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல 2012ம் ஆண்டில் ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த போது இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதே ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டே விசரணை பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்.

விஜயபாஸ்கரிடம்  விசாரணை ஏன்?

சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மக்களுக்கு சுகாதார ரீதியாக ஒரு பிரச்சனை என்றாலே உடனுக்குடன் அதனை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்வார். ஆனால், அன்றைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், தமிழ்நாடு மாநிலத்திற்கு அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை, சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு  அழைத்து செல்ல ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை ஏன்? என்ற கேள்வி நிலவுவதால் கூட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை பரிந்துரைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மருத்துவரிடம் விசாரணை ஏன்?

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதா உயிரிழந்தது டிசம்பர் 4ம் தேதியா? அல்லது 5ம் தேதியா? என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால், ஜெயலலிதா  டிசம்பர் 4 -ம் தேதி மதியம் 3.30 -3.50 மணிக்குள்  இறந்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதேபோன்று, அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் கொடியை அறைக்கம்பத்தில் பறக்கவிட்டதாக கூட செய்திகள் வெளியானது.

ஆனால், அதன்பிறகு அந்த செய்தி உண்மை இல்லை என்று கூறிவிட்டு,  மறுபடியும் 5 ஆம் தேதி வெளியிட்டனர். ஆனால் தற்போது, டிசம்பர் 4 -ம் தேதி மதியம் 3.30 -3.50 மணிக்குள் ஜெயலலிதா மரணம் என 2 பேர் சாட்சியம் அளித்துள்ளதாகவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கையில் உள்ளது. ஆனால் டிசம்பர் 5-ம் இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதான இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெயிட்டு இருந்தது. இதனால் ஜெயலலிதா உயிரிழந்த தேதியிலே இப்படி குழப்பங்கள் நிறைந்து காணப்படுவதால் மருத்துவர் பிரதாப் ரெட்டியிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

மருத்துவர் கே.எஸ்.சிவக்குமார் மீது விசாரணை ஏன்?

ஜெயலலிதாவுக்கு உடனிருந்து எப்போதும் சிகிச்சை அளிப்பவர் கே.எஸ்.சிவக்குமார். இவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவுக்காரர் ஆவர். ஜெயலலிதா மயங்கி விழுந்த நேரத்தில் கூட உடனிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர். ஆனால் அதன்பிறகு எல்லாம் விஷயமும் ரகசியமாக்கப்பட்டது. இந்த காரணத்தால் கூட இவரிடம் விசாரணை நடத்துவதற்கு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மீது விசாரணை ஏன்?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதற்கான ஏ மற்றும் பி ஃபார்மில் ஜெயலலிதாவின் பெருவிரல் கைரேகை
 வைத்த படிவங்கள் வெளியானது. அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் இதனை அறிவித்தார். உடல்நிலை மோசமான நிலையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டதாகவும், சுயநினைவு இல்லை என்றும் கூறப்பட்ட நிலையில், ஜெயலலிதா எப்படி அந்த படிவத்தில் கைரேகை வைத்திருப்பார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டதால் அறிக்கையில் இவரையும் விசாரிக்கும் படி பரிந்துரைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.   

எனிவே, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடங்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையே இறுதியில் ஒரே கேள்விகள் நிறைந்த அறிக்கையாக வெளிவந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com