ஓபிஎஸ் முதலமைச்சரானது தற்செயல் அல்ல...சூழ்ச்சி வெளிவருமா?

கடந்த 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, வீட்டில் மயங்கிய நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஓபிஎஸ் முதலமைச்சரானது தற்செயல் அல்ல...சூழ்ச்சி வெளிவருமா?

தற்போது வெளியாகியிருக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் குறிவைக்கிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் 2 ஆம் நாள் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் மீதும் சந்தேகப்பார்வையை போர்த்தியுள்ளது. 

2016ல் ஜெயலலிதா மரணம்

கடந்த 2016ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, வீட்டில் மயங்கிய நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு எல்லாமே ரகசியமாய் போனது. பிறகு 2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அவசர அவசரமாக முதலமைச்சரான ஓபிஎஸ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவரும், அவரது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்தவர் தான் ஓ.பன்னீர் செல்வம். அப்படி இருந்தவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு தன்னைப் பொருத்திக்கொள்ளத் தயாரானார். அதுமட்டுமின்றி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசாக அவர் தன்னை நிலைநிறுத்தி கொண்டு முதலமைச்சரும் ஆனார்.

ஆனால், அந்த பதவி அவருக்கு நிரந்தமாக நிலைக்கவில்லை. பதவியை இழந்த பின்னர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ”தர்மயுத்தத்தை” நடத்தினார். இந்த தர்மயுத்தம் அப்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதோடு, ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ்க்கும் சம்மதம் இருக்குமோ? அதை மறைக்கவே இந்த தர்மயுத்த நாடகமோ? என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.

ஓபிஎஸ் முதலமைச்சர் ஆனது தற்செயல் இல்லை

இந்நிலையில் , ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவுடன் அனைத்து நிகழ்விலும் உடனிருந்த ஓபிஎஸ், அவரது மறைவிற்கு பிறகு, சிறிதும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதலமைச்சர் ஆனார். இவருடைய இந்தச் செயல் தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நீண்டகாலம் நீடிக்காத பதவி

தொடர்ந்து, அதிகாரமையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதிதாகக் கிடைத்த பதவி அவருக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை என்றும், ஏமாற்றத்தினால் கோபமடைந்த ஓபிஎஸ் அரசியல் லாபத்தை அடையும் நோக்கில் 2017 பிப்ரவரியில் “தர்மயுத்தம்” தொடங்கினார். 

சிபிஐ விசாரணையை கோரிய ஓபிஎஸ்

தனக்கு கிடைத்த முதலமைச்சர் பதவி மோகத்தால் R.2 மருத்துவமனையில் என்ன நடந்தது?, குறிப்பாக சிகிச்சை முறையில் என்ன நடந்தது என்பதை முழுமையாக அறிந்தும், பதவி பரிபோகும் வரை ஒரு அமைதியான பார்வையாளராகவே இருந்த ஓபிஎஸ், தனது பதவியை இழந்த பின்னர், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி “தர்மயுத்தத்தை” நாடினார். பின்னர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐ விசாரணையைக் கோரியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இப்படி தனது பதவி போதைக்காக ஜெயலலிதா மரணம் தொடர்பான ரகசியங்களை வெளியே சொல்லாத ஓபிஎஸ், பதவி இல்லை என்பது தெரிந்ததும்  “தர்மயுத்தம்” என்ற பெயரில்  நாடகம் நடத்திய ஓபிஎஸ்சின் மீதும் சந்தேகப்பார்வையை ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை போர்த்தியுள்ளது. இந்த சந்தேக போர்வையின் மூலம் ஓபிஎஸ் முதலமைச்சர் ஆனது தற்செயலான நிகழ்வு இல்லை? என்பதையும், ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ்சின் ரகசிய  சூழ்ச்சி வெளிவருமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.