தமிழ்நாட்டின் ஷிண்டே யார்? பாஜக போடும் திட்டம்!

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகத்தில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டின் ஷிண்டே யார்? பாஜக போடும் திட்டம்!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசியது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் முதன்மையான நகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடினார். அந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சிவசேனாவையும் திமுகவையும் ஒப்பிட்டு பேசினார்.

சிவசேனா - திமுக ஒப்பீடு

சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யா தாக்கரேவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஷிண்டே அதற்கு எதிராக கலகம் செய்து தனது தலைமையை நிலைநாட்டியதாகவும் கூறினார். அதே போல திமுகவும் அமைச்சரவையை விரிவாக்க திட்டமிடுவதாகவும் உதயநிதி அமைச்சரானால் இங்கிருந்தும் ஒரு ஷிண்டே புறப்படுவார் எனக் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகத்தில் ஈடுபட்டார். முதலில் தன்னுடன் 12 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலகத்தை தொடங்கிய அவர், பிறகு சிவசேனாவில் உள்ள 55 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்களை தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. அதனால் மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் உத்தவ் தாக்கரே.

அதனைத் தொடர்ந்து பாஜக - சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டணியில் மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டேவிற்கான அனைத்து உதவிகளும் பாரதிய ஜனதா தான் செய்துள்ளது என்பது உறுதியானது.

ஆப்ரேசன் தாமரை

பல்வேறு மாநிலங்களில் பாஜக இவ்வாறு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு ஆப்ரேசன் தாமரை என பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகா, கோவா, மணிப்பூர், மேகாலயா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு தான் ஆட்சியைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே?

தமிழ்நாட்டிலும் பாஜக திமுகவின் சில முக்கியத் தலைவர்களை வளைக்கக் கூடுமோ என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் மோடி, அமித்ஷா ஆகியோர் வாரிசு அரசியலைக் குறிப்பிட்டு தான் பேசினர். விரைவில் தெலங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி மலரும் எனக் கூறியுள்ளனர்.

பாஜக, அதிமுக போன்ற சில முக்கிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளோ சேகர் பாபு, செந்தில் பாலாஜி போன்றார் தான் திமுகவிற்குள் ஷிண்டே போல மாற வாய்ப்புள்ளதாக வெளிப்படையாகவே கூறியுள்ளனர். பாஜக துணையுடன் அப்படி திமுகவிற்குள் வாரிசு அரசியலுக்கு எதிரான குரல் ஒலிக்குமானால் அது திமுகவிற்குள் பிளவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.