கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான மற்ற இருவர் யார்?

கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இருவரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை..!

கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான மற்ற இருவர் யார்?

கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் அவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்ட மற்ற இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி கோவையில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி பொன் தாரணி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவி முன்பு படித்த சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி, பிறகு இரண்டு மாதத்திற்கு முன்பு வேறு பள்ளியில் சேர்ந்துள்ளார். இருப்பினும் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவியின் தற்கொலைக்கு பிறகு தான் பாலியல் சீண்டல் குறித்தும், அசிரியரால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் குறித்தும் வெளியே தெரியவந்தது. மாணவி இறப்பதற்கு முன்பு தனது கைப்பட ரீத்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா, இந்த சார் இவர்களை சும்மா விடக் கூடாது என எழுதி வைத்திருந்தார். 

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அந்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் அப்பள்ளியில் பல மாணவிகளுக்கு அவர் இது போல் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இவை தெரிந்தும் கூட அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காது, மாணவிகளை மிரட்டியும், உளவியல் மருத்துவர்களிடமும் அழைத்து சென்றுள்ளார். மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்படவும், தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் தலைமறைவானார். அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பெங்களூருவில் அவரை அதிரடியாக கைது செய்தனர். 

இதற்கிடையில் மாணவியின் பெற்றோர், உறவினர் மற்றும் சக மாணவர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை மாணவியின் உடலை பெறமாட்டோம் என போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறியதோடு நிச்சயம் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மாணவியின் உடல் பெறப்பட்டு, மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. 

இந்த நிலையில், கோவை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சில துண்டு சீட்டு கிடைத்துள்ளது.அதில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் அதேபோல வேறு யாராவது அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனரா என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம். இந்த சம்பவம் நடந்த உடனேயே, பள்ளியின் முதல்வர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.அப்படி சொல்லாத காரணத்தால், பள்ளி முதல்வரையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்து கைது செய்துள்ளோம். மாணவி தற்கொலை செய்ததற்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். மாணவி வீட்டில் தேடும் போது சில ஆவணங்கள் கிடைத்தன. அதில் ஒன்றுதான் அந்த துண்டு சீட்டு. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி எந்த சூழ்நிலையில் இறந்தார்?, அவரின் இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து எதிரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஆக ஆசிரியர் தவிர்த்து மற்ற இரண்டு பேர் யார்? அவர்களால் மாணவிக்கு என்ன கொடுமை நேர்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.