யார் இந்த கே.பி.பி.பாஸ்கர்..! ஈபிஎஸ்ஸின் கொதிப்பிற்கு காரணம் என்ன?

யார் இந்த கே.பி.பி.பாஸ்கர்..! ஈபிஎஸ்ஸின் கொதிப்பிற்கு காரணம் என்ன?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.கே.பி.பி பாஸ்கர் வீட்டில் நேற்று 12 மணி நேரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

கே.பி.பரமசிவம்:

கே.பி.பி.பாஸ்கரின் தந்தை கே.பி.பரமசிவம் நாமக்கல் மாவட்ட அதிமுகவில் பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மிகவும் பழக்கமானவர். பிரமசிவத்தின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் கால் ஊன்ற தொடங்கி இருக்கிறார் கே.பி.பி.பாஸ்கர்.

ஆரம்பகால அரசியல்:

2006 இல் நாமக்கல் நகர்மன்ற தலைவர் பதவி பாஸ்கருக்கு வழங்கப்பட்டது. சுமார் 6 மாத காலம் அந்த பதவியில் நீடித்த அவருக்கு, அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சிபாரிசின் பெயரில், நாமக்கல் நகர செயலாளர் பதவி பாஸ்கருக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: திமுகவிற்கு எதிராக ஒன்று சேர்கிறார்களா? அதிமுகவை இணைப்பதற்கு வகுக்கப்படும் அரசியல் வீயூகங்கள் என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல்:

நாமக்கல் நகர செயலாளராக இருந்துகொண்டு, தந்தை விட்டுச்சென்ற லாரி  தொழிலை செய்து வந்துள்ளார். அதில் நஷ்டமும் அடைந்ததாகக் கூறப்படுகிறது. 2011 இல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பாஸ்கருக்கு கொடுத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. 

முதல் வெற்றி:

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று   நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். தங்கமணியின் தீவிர ஆதரவாளராக இருந்த பாஸ்கருக்கு அவரது சிபாரின் அடிப்படையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு உறுப்பினர் பதவி:

அதிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறை நாமக்கல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார் பாஸ்கர்.. அதன் பின்னர் வந்த நாட்களில் பாஸ்கருக்கு அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் பதவியையும் தங்கமணி பெற்றுக்கொடுத்துள்ளார். நாமக்கல் தொகுதியில் யாரும் அசைக்கமுடியாத அதிமுகவின் பலமாக இருந்தார் பாஸ்கர்.

முதல் தோல்வி:

மூன்றாம் முறையாக 2021 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பாஸ்கர் திமுகவின் இராமலிங்கத்திடம் தோல்வியை தழுவினார். நாமக்கல் தொகுதியில் அவர் தோற்றது பெரும் அதிர்ச்சியானதாக இருந்தாலும், திமுகவிற்கு அது பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது. தற்போது ஈபிஎஸ் இந்த மிகத்தீவிர ஆதரவாளராக அறியப்பட்டு வருகிறார் பாஸ்கர்.

மேலும் படிக்க: இவங்க 2 பேர மட்டும் விட்டுட்டாங்க.. என்னவா இருக்கும்? ஆனாலும் அந்த ஒரு விஷயத்துக்காக முதலமைச்சருக்கு சலாம் போடலாம்..!

தொழில் வளர்ச்சி:

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்னர் எந்த தொழில் நஷ்டம் ஏற்பட்டது என கூறப்பட்டதோ, அதே லாரி தொழில் நடத்திய பாஸ்கரிடம் தற்போது 40 LPG டேங்கர் லாரிகள் உள்ளது. மேலும் நாமக்கல்லில் பல தொழில்களை செய்து வருகிறார். குறிப்பாக எண்ணற்ற வணிக வளாகங்களும், நிலங்களும் அவருக்கு சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 

12 மணி நேரம் சோதனை:

பாஸ்கர் எம்.எல்.ஏவாக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் புகார் வந்ததை அடுத்து, கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது மனைவி உமா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்ததாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி, நாமக்கல்லில் 24 இடங்கள், மதுரை திருப்பூரில் தலா ஓர் இடம் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் 12 மணி நேரம் சோதனை நடத்தினர். 

சோதனையில் கைப்பற்றப்பட்டவை:

அந்த சோதனையில், 26,52,660 ரூபாயும், 1,20,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும், நான்கு சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், ஒரு கிலோ 680 கிராம் தங்க நகைகள், ஆறு கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புகள் கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஈபிஎஸ் ஆவேசம்:

கே.பி.பி.பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதைக் கண்டித்து, அதிமுக இடைகாலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கதில், "திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு, இந்த விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் வீட்டிலும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது" என பதிவிட்டிருந்தார்.

ஆவேசத்திற்கு காரணம் என்ன?

திமுக ஆட்சி கட்டிலில் எறியதில் இருந்தே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  காமராஜ் என அனைவரும் ஈபிஎஸ் இன் ஆதரவாளர்கள் என்பது இங்கு அதிக கவனம் பெறுகிறது. கே.பி.பி பாஸ்கர் தங்கமணியின் மிகத் தீவிர ஆதரவாளராக உள்ளார். தங்கமணி ஈபிஎஸ் இன் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. 

இதனால் கே.பி.பி.பாஸ்கர் மீதான சோதனை என்பது அடுத்து தங்கமணியை குறிவைப்பதற்கான ஒரு நகர்வாக பார்க்கப்படுகிறது. 

ஈபிஎஸ் இன் சரிவு:

தொண்டர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் தனக்கு தான் ஆதரவாக உள்ளனர் என ஈபிஎஸ் கூறிவரும் வேளையில், அடுத்தடுத்து அவரின் ஆதவாளர்கள் மீது நடத்தப்படும் சோதனைகள் ஈபிஎஸ் இன் செல்வாக்கைக் குறைக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.