பற்றி எரியும் சாலைகள்...என்ன நடக்கிறது மணிப்பூரில்?

பற்றி எரியும் சாலைகள்...என்ன நடக்கிறது மணிப்பூரில்?

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக, மணிப்பூர் அரசு கடந்த ஜூலை 7 ஆம் நாள் காலை முதல் மாநிலம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு அலைபேசி இணைய சேவையை நிறுத்தி வைத்துள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி சிலர் இன உணர்வுகளையும் வெறுப்புப் பேச்சுகளையும் பரப்பி வருவதாக மணிப்பூர் உள்துறை தெரிவித்துள்ளது.

144 தடை உத்தரவு

கடந்த ஆகஸ்ட் 6 அன்று இரண்டு வாகனங்களை தீக்கிரையாக்கிய இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் நடந்த பின்னர், பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் 144வது பிரிவின் கீழ் அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மணிப்பூர் மலைப் பகுதிகள் மாவட்ட அவை 6வது மற்றும் 7வது சட்டத் திருத்த மசோதாக்களை நிராகரித்த பின்னர், மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் மலையக மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்க்வரத்தை துண்டிக்கும் விதமாக காலவரையற்ற பொருளாதாரத் தடையை விதித்ததால் பதற்றம் உருவாகத் தொடங்கியது.

தன்னாட்சி மாவட்ட அவை

மலைப் பகுதிகள் அதிக நிதி மற்றும் நிர்வாக தன்னாட்சியைப் பெறுவதையும் அவை பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இணையாக வளர்ச்சியடைவதையும் உறுதிசெய்ய மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் (திருத்தம்) மசோதா 2021 ஐ சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய மாணவர் சங்கம் கோரி வருகிறது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்த மசோதாக்கள் பழங்குடியினரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியாது என்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் கூறியுள்ளது.

முற்றுகையானது பழங்குடியினர் அல்லாத பெரும்பான்மையான இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளுக்குச் செல்லும் பொருட்களைத் தடுத்து நிறுத்தியது. பள்ளத்தாக்கு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட முற்றுகையை பார்த்த பின்னர், மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதியைச் சார்ந்த அமைப்பான மெய்தி லீபுன் ஆகஸ்ட் மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தை பூட்டியிருந்தது. பின்னர் அதை போலீசார் திறந்து வைத்தனர்.

அனைத்து பழங்குடி மாணவர்கள் சங்கத்தின் தலைவர்கள் 5 பேரை காவல்துறையினர் ஆகஸ்ட் 4 ஆம் நாள் கைது செய்து, போக்குவரத்து முற்றுகையை ஏற்படுத்த சதி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடரும் போராட்டம்

எங்கள் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம் என்று மாணவர் சங்க துணைத் தலைவர் வன்லாலியன் காட் கூறியுள்ளார். மணிப்பூரில் எப்போதும் மலைப் பகுதி மக்களுக்கும் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களுக்கும் இடையே பிளவு இருந்து வருகிறது. 2002-17ல், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலம் தொடர்ச்சியான பொருளாதார தடைகளை சந்தித்தது. 2017 மணிப்பூர் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தை முற்றுகையிலிருந்து அகற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தப் பிரச்சினை ஒழிந்தது.

முதல்வர் பிரேன் சிங் தனது முதல் ஆட்சிக் காலத்தில், மலைகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இடையே உள்ள பாகுபாடுகளை குறைக்க ‘மலைகளுக்குச் செல்லுங்கள்’ திட்டத்தைத் தொடங்கினார். பாஜக ஆட்சியைத் தக்கவைத்த பிறகும் அத்திட்டத்தை அவர் தொடர்கிறார்.

- ஜோஸ்