குஜராத்துக்கு மட்டும் அதிக தடுப்பூசிகள்,.. பிற மாநிலங்களை புறக்கணிக்கிறது மத்திய அரசு.! தமிழக அரசு பகிரங்க குற்றச்சாட்டு.!

குஜராத்துக்கு மட்டும் அதிக தடுப்பூசிகள் கொடுத்து பிற மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என தமிழக அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலைதான் தற்போது உள்ளது. ஆனால் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறையால் இந்தியா தற்போது திணறி வருகிறது. அதற்கு காரணம் இரண்டாம் அலை இந்தியாவில் பரவும் முன்பே வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்திய அரசு ஏற்றுமதி செய்ய அனுமதித்ததே என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. மேலும் ஆரம்பத்தில் மத்திய அரசே தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசிடம் கொடுத்தது. அதன் பின் மாநில அரசுகள் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ஆனால் தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கொடுக்கும் விலையை விட மாநிலங்களுக்கு இரண்டு மடங்கு அதிக விலைக்கு தடுப்பூசிகளை வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குவதாகவும் பிற மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு அதிக தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசும் இந்த குற்றசாட்டை எழுப்பியுள்ளது. இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் அதிகமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான தடுப்பூசிகள் மட்டுமே வழங்குகின்றது என்றும், தடுப்பூசி விவகாரத்தில் மாநிலங்கள் செயல்முறை குறித்து மத்திய அரசு முரண்பட்டு செயல்படுகிறது என்றும், முதலில் மாநிலங்கள் வாங்க கூடாது என்று சொன்ன மத்திய அரசு இப்போது மாநிலங்களை தடுப்பூசி வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறது. எனவே 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து மத்திய அரசு மேல் வைக்கப்பட்ட நேரடியான விமர்சனம் என்று தான் எடுக்கத்தோன்றுகிறது. மேலும் பல மாநிலங்கள் இதே கருத்தை கூறியுள்ளன. இந்நிலையில் இந்த விமர்சனத்துக்கு மத்திய அரசின் பதில் என்ன என்று வரும்காலங்களில் தான் தெரியவரும்.

குஜராத்துக்கு மட்டும் அதிக தடுப்பூசிகள்,.. பிற மாநிலங்களை புறக்கணிக்கிறது மத்திய அரசு.! தமிழக அரசு பகிரங்க குற்றச்சாட்டு.!