வீரப்பனுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்,.!சைலேந்திர பாபு பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்.!

வீரப்பனுக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்,.!சைலேந்திர பாபு பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்.!

தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு DGP யாக இருந்த திரிபாதியின் பதவிக்காலம் இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், தமிழகத்தின் அடுத்த DGP யார் என்ற கேள்வி எழுந்தது. பொதுவாக மூத்த IPS அதிகாரிகளே சட்டம் ஒழுங்கு DGP பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், இந்த போட்டியில் சைலேந்திர பாபு, ஷகில் அக்தர், கந்தசாமி, சுனில் குமார் சிங் ஆகியோர் போட்டியில் இருந்தனர். 

இதில் சீனியாரிட்டி அடிப்படையிலும், மாநில அரசின் ஆதரவு என்ற அடிப்படையிலும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு DGP யாக தமிழகத்தின் மூத்த காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறையில் பிறந்த சைலேந்திர பாபு தமிழக விவசாய கல்லூரியில் BSC  வேளாண் படிப்பும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மக்கள்தொகை ஆய்வுப்பிரிவில் முதுகலை மேல்படிப்பும், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் முடித்துள்ளார். 

சிறுவயது முதலே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த இவர் 1987ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார். முதன்முதலில் தருமபுரி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகக் காவல் பணியை தொடங்கிய இவர் அதன்பின் கோபிச்செட்டிப்பாளையம், சேலம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.  இதைத்தொடர்ந்து காவல்துறை DIG யாக பதவி உயர்வு பெற்ற இவர் வட சென்னை , தென் சென்னை, திருச்சி காவல் சரகத்தில் இணை ஆணையாளராகவும் பணியாற்றினார்.

பின்னர் கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், பின் பதவி உயர்வு பெறறு 2008ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படை IG யாக நியமிக்கப்பட்டார்.  அதோடு கோவை நகர காவல்துறை ஆணையாளராகவும், பின்னர் தமிழ்நாடு காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறை தலைவராகவும் இவர் பணியாற்றினார்.

இதன் பிறகு 2012ஆம் ஆண்டில் காவல்துறை கூடுதல் DIG  யாக பதவி உயர்வு பெற்றதும் தமிழ்நாடு கடலோர காவல் படையின் தலைமை அதிகாரியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2017ம் ஆண்டு சிறைத்துறை ADGP  யாக நியமிக்கப்பட்ட இவர் அடுத்த ஆண்டே ரயில்வே ADGP யாக பணிமாற்றப்பட்டார். இவ்வாறு தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் தற்போது காவல்துறையின் அதிஉயர் பொறுப்பான சட்டம் -ஒழுங்கு DGP யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கோவை மாநகர ஆணையராக பணிபுரிந்த காலத்தில் மோகன்ராஜ் என்பவர் ஒரு சிறுமியையும் அவரது தம்பியையும் கடத்தி அதில் சிறுமியை கற்பழித்து கொலை செய்தது தமிழகத்தையே உலுக்கியது. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான  மோகன்ராஜை என்கவுண்டர் செய்ததன் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்குக்கெல்லாம் தெரிந்த பிரபலமான காவல்துறை அதிகாரியாக மாறினார் சைலேந்திர பாபு. அதோடு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான `காக்க காக்க' படத்தின் போலீஸ் அதிகாரி வேடத்தில், சைலேந்திர பாபுவை மனதில் வைத்துக் கொண்டே தான் நடித்ததாக நடிகர் சூர்யா கூறியது இவரை மேலும் பிரபலமாகியது. சாமானிய மக்களும் பழகும் அளவு எளிமையான மனிதராக இருந்ததால் சாமானிய மக்களாலும் புகழப்பட்டார். 

வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த காவல்துறை அதிகாரி என்றால் அது சைலேந்திர பாபு தான். தங்கள் பகுதியில் எந்த அரசு பேருந்துகளும் வரக்கூடாது என்று வீரப்பன் தடை விதிக்க, தானே ஓட்டுநராக மாறி வீரப்பனின் கோட்டைக்குள் பேருந்தை ஓட்டிச்சென்றார் சைலேந்திர பாபு. அதோடு வீரப்பன் குழுவோடு பல துப்பாக்கி சண்டையிலும் மோதியுள்ள இவர், ஒருமுறை வீரப்பனை பிடிக்க திட்டமிட்டு அவரை சுற்றி வளைத்த நிலையில் மயிரிழையில் வீரப்பன் தப்பிச்சென்றுள்ளார்.  

இவ்வாறு தமிழகத்தில் காவல்துறை அதிகாரி என்றாலே சைலேந்திர பாபு என்று கூறுமளவு புகழ்பெற்ற இவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரருமாவார். 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி, 2003ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற உலக தடகளப் போட்டி, 2007ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார் என்பது தமிழகத்தின் பலருக்கு தெரியாத ஒரு விஷயமாகும். மேலும் 50 மராத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் வெற்றியும் பெற்றியுள்ளார். 1 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓடவே நாம் திணறும் நிலையில், பல முறை 100 கிலோமீட்டர் தொலைவுக்கு சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார். அதோடு பல புத்தகங்கள் எழுதி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாகவும் இவர் திகழ்ந்துள்ளார். 

இப்படி காவல்துறையில் பல சாகசங்கள் செய்துள்ள சைலேந்திர பாபு இன்னும் இரண்டு ஆண்டுகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு DGPயாக செயல்பட்டு இன்னும் மிக பெரிய சாதனைகள் படைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.