தனியாருக்கு கொடுக்கப்படுகிறதா மின்சார வாரியம்? போராடத் தயாராகும் தொழிற்சங்கங்கள்!

தனியாருக்கு கொடுக்கப்படுகிறதா மின்சார வாரியம்? போராடத் தயாராகும் தொழிற்சங்கங்கள்!

மின்சார சட்டம் 2003 திருத்த மசோதாவை இந்திய ஒன்றிய மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஒன்றியம் முழுவதும் மின் துறை ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடு[பட்டனர். நாடாளுமன்றத்திலும் இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்தனர். கடும் எதிர்ப்பு நிலவ்வே இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பியுள்ளது அரசு.

மின்சார சட்ட திருத்த மசோதா

இந்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா மின் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு அதிக அதிகாரம், அதிகபட்ச மின் கட்டணம் நிர்ணயம் என பல விடயங்களை உள்ளடக்கியது. இந்த மசோதாவின் மிக முக்கிய அம்சமாக, மானியங்களைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார வாரியம்

தமிழ்நாடு அரசுத் துறையான தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் லிமிடெட் என்ற நிறுவனமாக மாற்றப்பட்டு அதன் கீழ் இரண்டு துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO)  மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) என்னும் இரண்டு நிறுவனங்கள் ஆகும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மின் உற்பத்தி பணிகளையும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மின் தொடரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு என நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் லிமிடெட் என்னும் நிறுவனமாக இது மாற்றப்படும் போதே எதிர்ப்புகள் உருவாகியது. மின்சார வாரியத்தை தனியார்மயமாக்குவதற்கான முயற்சி இது என குற்றச்சாட்டுகள் எழுந்தது.

மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனங்களிடம் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் மின்சார வாரியத்திற்குச் சொந்தமான பல மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிப்பதில்லை. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.25 லட்சம் கோடி கடனில் உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி செய்தால் ஆகும் செலவை விட இரண்டு மடங்கு அதிக தொகை கொடுத்து தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்குவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியமே மின் உற்பத்தி, பகிர்மானத்தை முழுவதுமாக பொறுப்பேற்று செய்து வந்த காலங்களில் லாபகரமாக இயங்கி வந்தது. ஆனால் படிப்படியாக மின்சார வாரியப் பணிகளில் தனியார் நிறுவனங்கள் நுழைந்த பிறகு தான் தமிழ்நாடு மின்சார வாரியம் கடனில் மூழ்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

போராட்டத்தை தொடங்கிய தொழிற்சங்கங்கள்

தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால் மின் துறை மீது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்து முழுவதுமாக ஒன்றிய அரசுக்கு அதிகாரத்தை வழங்குவது போன்ற திருத்தங்களைக் கொண்டுள்ளது. மின் கட்டணமும் இனி ஒன்றிய அரசாங்கம் தான் முடிவு செய்யும் என்ற நிலை உருவாகும். தனியார் நிறுவனங்கள் மின் துறையில் ஆதிக்கம் செலுத்தும். இதனால் மக்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதோடு புதுப்புது கட்டணங்களும் தனியார் நிறுவனங்களால் விதிக்கப்படும் சூழல் உருவாகும்.

எனவே தங்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் இந்த மின்சார சட்ட மசோதாவிற்கு எதிராக மின் துறை தொழிற்சங்கங்கள் போராடத் தொடங்கிவிட்டன. பொது மக்களும் இப்போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே தொழிற்சங்கத்தினரும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

- ஜோஸ்