திமுகவின் டெல்லி முகமாகும் ஸ்டாலினின் மருமகன்..! பிறந்தநாள் விழாவால் வெளிவந்த உண்மை.! 

திமுகவின் டெல்லி முகமாகும் ஸ்டாலினின் மருமகன்..! பிறந்தநாள் விழாவால் வெளிவந்த உண்மை.! 

மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கடந்த வாரம் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மட்டும் அல்லாமல் பத்திரிகையாளர்களும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். இதை முன்வைத்து திமுகவின் செல்வாக்கு கூடி கொண்டே வந்தாலும், சபரீசனின் மதிப்பு தான் கட்சிக்குள் உயர உயர பறந்து செல்கிறது என்கின்றனர் திமுக தரப்பினர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் முக்கிய விவகாரங்களில் அதிகமாக தலையிடுகிறார் என்று கூறப்படுகிறது. அதிலும் தேர்தல் வந்தால் சபரீசன்தான் பெரும்பாலும் கூட்டணிகளுடன் பேசுவது, தலைவர்களுடன் சீட் விவகாரம் நடத்துவது போன்ற விஷயங்களை கவனித்துக்கொள்வார். 

இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் நேரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு காரணம் விரைவில் அவர் நேரடி அரசியலில் களமிறக்கப்படுவார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் தான் அதிகாரிகள் கூட அவருக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும், விரைவில் அவர் ராஜ்யசபா உறுப்பினராக உயர்த்தப்படலாம் என்றும் சொல்கிறார்கள். 

அதோடு அரசியல் அறிவு கொண்ட சபரீசனை டெல்லியின் திமுக முகமாக மாற்றிவிட்டால் அது அரசியல் ரீதியில் அதிமுகவுக்கு வலுவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் ஏற்கனவே குடும்ப கட்சி என்று விமர்சிக்கப்படும் நிலையில், சபரீசனுக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட்டால் அது இன்னும் அந்த விமர்சனத்தை வலுப்படுத்தும் என்று முக்கிய தலைவர்கள் ஸ்டாலினிடம் கூறியுள்ளனர். 

இதைத் தாண்டி, நேரடி அரசியலில் இறங்க சபரீசனும் விரும்பவில்லை என்றும், அது தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும் என்றும் நினைக்கிறாராம். அதனால் தான் 2016 தேர்தலிலே சபரீசன் களமிறங்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில் அதற்கு அவர் மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.