ஒரே மேடையில் ஸ்டாலின்-ராகுல்…இப்போதே பிரச்சாரம் தொடங்குகிறதா?

ஒரே மேடையில் ஸ்டாலின்-ராகுல்…இப்போதே பிரச்சாரம் தொடங்குகிறதா?

காங்கிரஸ் கட்சி கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்தது. இதுபோல பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. கட்சிக்கென தலைவர் இல்லாததே தேர்தல் தோல்விக்கு காரணம் என கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் கட்சிப் பணியில் ராகுல் காந்தி மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்பதில்லை எனவும் கூறினர்.

மூத்த தலைவர்கள் விலகல்

இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ராகுல்காந்தி நாடு தழுவிய பாதயாத்திரை நடத்த முடிவு செய்தார். இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி செப்டம்பர் 7 ஆம் நாள் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை தொடங்குகிறது. 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3 ஆயிரத்து 750 கி.மீட்டர் தூரத்திற்கு அவர் நடைபயணம் செல்கிறார். கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம்

முன்னதாக கன்னியாகுமரியில் காங்கிரஸ் பொதுக்கூட்டமும் நடக்கிறது. இதில் ராகுல்காந்தி பேசுகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கன்னியாகுமரியில் 7-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார். அன்று ஒரே மேடையில் இருவரும் பங்கேற்று பேசுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரசார் செய்து வருகின்றனர். பின்னர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரை மூன்றரை கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடைபயணம் செல்கிறார். தமிழகத்தில் ராகுல் காந்தியின் நடைபயணம் 4 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் பாதயாத்திரையின் போது ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

நடைபயண விவரங்கள்

அவர்கள் ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடந்து செல்வார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி முதல் நாள் நடைபயணத்தைஅகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நிறைவு செய்கிறார். இரவு அங்கேயே தங்குகிறார். மறுநாள் (8-ந்தேதி) காலை அங்கிருந்து கொட்டாரம், சுசீந்திரம் கோட்டாறு வழியாக நாகர்கோவிலில் உள்ள ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்றடைகிறார். அங்கு இரவு தங்குகிறார்.

செப்டம்பர் 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை அங்கிருந்து புறப்பட்டு முளகுமூடு சென்றடைகிறார். இரவு அங்கு தங்குகிறார். 10-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு செருவாரக்கோணத்தில் தங்குகிறார். செப்டம்பர் 11 ஆம் தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் செல்கிறார். குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதையடுத்து தமிழ்நாடு காங்கிரசாரும் குமரி மாவட்ட காங்கிரசாரும் அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

கே.எஸ்.அழகிரி ஆய்வு

நடைபயணம் செல்ல உள்ள பாதைகள் விவரம் உத்தேசமாக தயாரிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட உள்ளது. ராகுல் காந்தி நடைபயணம் செய்யவுள்ள இடங்கள் இறுதி செய்யப்பட உள்ளதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இரண்டாவது முறையாக அடுத்த வாரம் குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிட்டு உள்ளார். நடைபயண தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.