தமிழ்நாடு பெயர் சூட்ட தன்னுயிர் தந்த சங்கரலிங்கனார்!

தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு தொடர்ந்து மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு பெயர் சூட்ட தன்னுயிர் தந்த சங்கரலிங்கனார்!
Published on
Updated on
2 min read

மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டிட மொழிவழித் தமிழ் மாகாணம் அமைத்திட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியவர் சங்கரலிங்கனார்.

காங்கிரஸ் தொண்டராக 

1922இல் காந்தியின் தலைமையில் பேராயக் கட்சி இயங்கிய போது கதர் இயக்கம் தீவிரம் பெற்றது. அப்போது தான் மட்டுமல்லாது தமது குடும்பத்தினரையும் கதராடை உடுக்கச் செய்தார். விருதுநகரில் காதி வஸ்திராலயம் என்ற பெயரில் கடை ஒன்றைத் திறந்து கதர் குறித்து விழிப்புணர்வு ஊட்டினார்.
1925இல் காந்தியை மும்பையில் சந்தித்ததோடு அங்கு சில காலம் தங்கியிருந்து கதர் பரப்புரையை மேற்கொண்டார். 1930இல் காந்தி நடத்திய தண்டி பயணத்திலும் பங்கு கொண்டார்.

சிறை சென்ற சங்கரலிங்கனார்

தமிழ்நாடு திரும்பிய சங்கரலிங்கனார் திருச்சி, கரூரில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார். காந்திய வழியை தொடர்ந்து கடைபிடித்து வந்தார்.

மொழிவழி அரசு

இந்திய ஒன்றியத்தில் மாகாணங்கள் மொழி வழியில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் உருவாக பொட்டி சிறீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு தெலுங்கு மக்களிடையே பெரும் எழுச்சி உண்டாகிற்று. அதனால் இந்திய அரசு ஆந்திர மாநிலம் அமைக்க ஒப்புக் கொண்டது. 

1955ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணம் மொழிவாரியாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. மொழி வழி மாநிலங்கள் அமைக்க மாநில சீரமைப்புக் குழுவும் இந்திய அரசால் அமைக்கப்பட்டது. 

தமிழ்நாடு பெயர் கோரிக்கை

ஆனால் தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு தொடர்ந்து மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. இதனை பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர். அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தான் மெட்ராஸ் மாகாணத்தை ஆட்சி செய்து வந்தது. 

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை அக்கட்சி மறுத்து வந்ததை எதிர்த்து ஒரு காங்கிரஸ் தொண்டரே போராட்டத்தில் இறங்கினார். தமிழர் தாயகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டுமென காங்கிரஸ் தொண்டரான சங்கரலிங்கனார் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார். அக்டோபர் 13, 1956 அன்று  தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி 79 நாட்கள் சாகும் வரை உண்ணநிலை மேற்கொண்டு உயிர் துறந்தார்  தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்தார்.

மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடானது

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 1968 சூலை 18 ஆம் நாள் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் நவம்பர் 23, 1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து திசம்பர் 1, 1968இல் தமிழ்நாடு முழுவதும் பெயர் மாற்றத்தை விழாவாக கொண்டாடுமாறு அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை அழைப்பு விடுத்திருந்தார்.

- ஜோஸ்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com