வெற்றிபெற்று 23 நாட்கள் கடந்தும் பதவியேற்காத புதுவை எம்.எல்.ஏக்கள்..! பாஜக நெருக்கடி காரணமா? 

வெற்றிபெற்று 23 நாட்கள் கடந்தும் பதவியேற்காத புதுவை எம்.எல்.ஏக்கள்..! பாஜக நெருக்கடி காரணமா? 

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. மேலும் ஐந்து சுயேட்சைகள் வெற்றிபெற அதில் ஒரு சுயேச்சை பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். 


வெற்றிபெற்று இத்தனை நாள் ஆகியும் இன்னும் எந்த எம்.எல்.ஏக்களும் பதவியேற்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றும் இன்னும் அவரது அமைச்சரவை நியமிக்கப்படவில்லை. அமைச்சரவை நியமிக்கப்படாததால் புதுவையின் ஆட்சி பொறுப்பு தற்போது துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இருக்கிறது. அவரும் புதுவையின் பொறுப்பு ஆளுநராகவே நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கொரோனா பெரும்தொற்று இருக்கும் நிலையில், புதுவை அரசால் விரைவாக செயல்படமுடியவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.  

இந்நிலையில் புதுவையில் நிலவும் இந்த குழப்பங்களுக்கு பாஜகவே காரணம் என்று சொல்லப்படுகிறது. புதுவையில் முதலில் ரங்கசாமியிடம் முதல்வர் பதவியை பாஜக கேட்டதாகவும், ஆனால் அதற்கு ரங்கசாமி மறுத்ததால் துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர் பதவிகள் வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது. இது பற்றி பாஜக வெளிப்படையாகவே கூறியும் விட்டது. ஆனால் இதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதேபோல  தற்காலிக சபாநாயகராக லெட்சுமி நாராயணனை பரிந்துரை செய்து முதல்வர் ரங்கசாமி அதற்கான கோப்பை துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பினார். அதன்படி லெட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமித்து துணை நிலை ஆளுநர் கடந்த 21ந்தேதி உத்தரவிட்டார். ஆனால் அந்த அறிவிப்பானை வெளியாகி 4 நாட்கள் ஆகியும் இதுவரை தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படாமல் உள்ளார். இதுவும் பாஜகவின் வேலையாக இருக்கும் என்றும் இதன் மூலம் பாஜக ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது.

பாஜகவின் நெருக்கடி காரணமாக திமுகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்கலாமா என்றும் ரங்கசாமி யோசிப்பதாகவும், ரங்கசாமியின் இந்த முடிவுக்கு திமுகவும் ஆதரவு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்களையே தன் பக்கம் இருக்க பாஜக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.