தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா...சீனாவை சீண்டிய சபாநாயகரின் பேச்சு!

தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா...சீனாவை சீண்டிய சபாநாயகரின் பேச்சு!
Published on
Updated on
1 min read

அமெரிக்க அரசியலாளரும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி தைவானுக்கு மேற்கொண்டுள்ள பயணம் சீனாவிற்கு பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

ஒரே சீனா கொள்கை

சீன மக்கள் குடியரசு(PEOPLE'S REPUBLIC OF CHINA) என்பது தான் சீனாவின் அதிகாரப்பூர்வ பெயர். சீனாவில் 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அப்போது அந்நாட்டை ஆண்டு கொண்டிடுந்திருந்த சியாங்கே ஷேக் தலைமையிலான குவோமிங்டாங் கட்சியினர் தைவானுக்கு தப்பியோடினர். தைவான் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவுப் பகுதியாகும். அங்கு சியாங்கே ஷேக் தலைமையில் சீன குடியரசு (REPUBLIC OF CHINA) நிறுவப்பட்டது. தற்போது வரை தைவான் நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் இதுவாகும்.

ஆனால் சீனா தாம் தான் அதிகாரப்பூர்வ சீனா என்றும், தன்னுடன் அரசியல் உறவு கொண்டிருக்கும் எந்தவொரு நாடும் தைவானை அங்கீகரிக்கக் கூடாது என திட்டவட்டமாகத் கூறிவிட்டது. இதனால் பல நாடுகளுடன் தைவான் வணிக உறவுகளை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது.

தைவானுக்கு பயணம்

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட 4 ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி, நேற்று தைவான் சென்றார். சீனாவின் எதிர்ப்புக்கு மத்தியில் அங்கு சென்ற அவருக்கு தைவான் அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நான்சி பெலோசி உரை

இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பெலோசி, கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு, சுகாதாரம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சிறந்த ஆளுமையை உறுதி செய்ததற்கு பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தைவான் அதிபர் சாய் இங்கவென்னை சந்தித்த பெலோசி, முன்னெப்போதையும் விட தற்போது தைவானுடனான அமெரிக்காவின் ஒற்றுமை முக்கியத்துவமானது என கூறினார். மேலும் தைவானின் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு சவால்களை எதிர்கொண்டாலும் அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை தைவான் உலகிற்கு நிரூபித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இராணுவ விமானங்களை பறக்கவிட்டு எதிர்ப்பு

முன்னதாக  நான்சி பெலோசி தைவான் வந்ததை விரும்பாத சீனா, அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் 21 ராணுவ விமானங்களை தைவான்  வான் எல்லையில் பறக்கவிட்டுள்ளது. தைவான் நாட்டுக்கு சில பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில் மணல் ஏற்றுமதி செய்வதை இன்று முதல் நிறுத்தி கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.

இதனிடையே தைவான் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நான்சி பெலோசி புறப்பட்டார். அவரை தைவான் உயரதிகாரிகள் நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com