18 ஆண்டுகளுக்குப்  பிறகு எம்.பி ஆன காலிஸ்தான் ஆதரவாளர்!

தனிநாட்டுக்கான எண்ணம் நீண்ட காலமாகவே சீக்கியர்களிடம் இருந்து வந்தது. சீக்கிய மத குருவான பிந்தரன் வாலே “காலிஸ்தான்” என்னும் சீக்கியர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்.

18 ஆண்டுகளுக்குப்  பிறகு எம்.பி ஆன காலிஸ்தான் ஆதரவாளர்!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சங்ரூர் நாடாளுமன்றத் தொகுத்திக்கான இடைத்தேர்தலில் சிரோண்மனி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியின் தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றிபெற்றுள்ளார்.இவர் காலிஸ்தான் ஆதரவாளர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

தனிநாட்டுக்கான எண்ணம் நீண்ட காலமாகவே சீக்கியர்களிடம் இருந்து வந்தது. சீக்கிய மத குருவான பிந்தரன் வாலே “காலிஸ்தான்” என்னும் சீக்கியர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்.1978 சுமார் பதினைந்து ஆண்டுகள் பல்வேறு ஆயுதக் குழுக்கள் காலிஸ்தான் கோரிக்கைக்காக செயல்பட்டுவந்தன.

பஞ்சாப் இளைஞர்களிடம் பிந்தரன்வாலேவுக்கு பெரும் ஆதரவு உண்டானது.ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிஸ்தான் போராளிகள் சீக்கிய மதத்தின் தலைமையிடமான பொற்கோயிலைத் தளமாகக் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர்.அவர்களை அழித்து பொற்கோயிலை கைப்பற்ற நினைத்த இந்திய அரசு ”ஆப்ரேசன்ப்ளூஸ்டார்” என்னும் இராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

சீக்கியப் போராளிகளுடன் பிந்தரன் வாலே

பத்தாயிரம் இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ஏராளமான பீரங்கிகளும், கவச வாகனங்களும் இந்த இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது.பொற்கோயில் மீது பெரும் தாக்குதலைத் தொடங்கியது இந்திய அரசு.பொற்கோயிலைச் சுற்றிக் குடியிருந்தவர்களும் இராணுவத் தாக்குதலுக்கு இலக்காகினர். ஏராளமான காலிஸ்தான் போராளிகளும், சீக்கிய பக்தர்களும் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.காலிஸ்தான் இயக்கத் தலைவர் பிந்தரன் வாலே இந்திய இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.இந்திய இராணுவத் தாக்குதலில் பொற்கோயில் கடுமையான சேதத்திற்குள்ளாகியது.

தங்கள் புனிதத் தலமான பொற்கோயில் மீது நடந்த தாக்குதல் சீக்கியர்களுக்குள் சீற்றத்தை உண்டாக்கியது.இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி மீது சீக்கியர்களுக்கு கடுமையான கோபம் இருந்தது.அந்தக் கோபம்இந்திரா காந்தியை பழி தீர்க்கும் அளவுக்குச் சென்றது.

பொற்கோயில் மீது இந்திய அரசு மேற்கொண்ட ”ஆபரேசன்ப்ளூஸ்டார்” இராணுவ நடவடிக்கையால் கோபமடைந்த அரசின் முக்கியப் பணிகளில் இருந்த சீக்கியர்கள் பலர் பதவி விலகினர்.அதில் ஒருவர் தான் சிம்ரஞ்சித் சிங் மான்.இவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர்.மகாராஷ்டிர மாநிலத்தில் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் கமாண்டண்ட் ஆக பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் பொற்கோயில் மீதான இந்திய இராணுவத்தின் தாக்குதல் நடந்தது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார்.

பொற்கோயில் மீது தாக்குதல் நடந்த சில மாதங்களிலேயே தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு வடஇந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றன.அதைக் கண்டித்து நடந்த போராட்டங்களுக்கும் ஆதரவளித்தார்.

தனது காலிஸ்தான் ஆதரவு செயல்பாடுகளுக்காக 5 ஆண்டு காலம் சிறையிலடைக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டு சிறையில் இருந்து கொண்டே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.பஞ்சாபில் மொத்தமிருந்த 13 நாடாளுமன்ற தொகுதிகளில் சிம்ரஞ்சித் சிங் மானின் சிரோண்மனி அகாலிதளம் கட்சி 6 இடங்களை கைப்பற்றியது.

இவர் நீண்ட காலமாக சீக்கியர்களின் அரசியல் உரிமைக்கும், பஞ்சாபி மொழி உரிமைக்கும் போராடி வருபவர். 1999 ஆம் ஆண்டு இதே சங்ரூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது பஞ்சாப் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி வேட்பாளரை வீழ்த்தி மூன்றாவது முறையாக நாடாளுமன்றத்திற்குச் செல்லவுள்ளார்.இவர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது சீக்கியர்களின் நலனில் அக்கறை கொண்ட பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

- ஜோஸ்