விஜய் படத்திற்கு ஏடி...அஜித் படத்தில் கோ ஆக்டர்.... மாஸ் காட்டும் கவின்

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் படத்திற்கு ஏடி...அஜித் படத்தில் கோ ஆக்டர்.... மாஸ் காட்டும் கவின்

கடந்த 2011 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின்.

இந்த தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமான பீட்சா என்ற படத்தில் நடித்தார். ஆனால், இந்தப் படத்தில் கவினின் கதாபாத்திரம் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை.

இதனால் மீண்டும் சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுத்த கவின், சரவணன் – மீனாட்சி என்ற சீரியலின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தார் கவின். 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான அந்த சீரியலில் வேட்டையனாக வலம் வந்த கவினுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தில் நடித்தார். அதன் பிறகு சத்ரியன், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் கவினுக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஹிட் அடிக்கவில்லை.

அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதிலும் காதல் மன்னனாக வலம் வந்தார் கவின். 94 ஆவது நாளில் சில பல பிரச்சனைகள் காரணமாக போட்டியிலிருந்து ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் வெளியேறினார்.

அதன்பிறகு வினித் வரபிரசாத் இயக்கத்தில் உருவான லிப்ட் படத்தில் நடித்திருந்தார். த்ரில்லர் மூவியாக எடுக்கப்பட்ட லிப்ட்டில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தின் மூலம் பிரபலமான அமிர்த்தா நடித்திருந்தார்.

இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றதை அடுத்து ‘ஆகாஷ் வாணி’ வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து முடித்திருக்கிறார். தற்போது நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஊர்குருவி’ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  

ஏற்கனவே விஜய்யின் ‘பீஸ்ட்‘ படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் பணியாற்றியுள்ள நடிகர் கவின், தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் ‘ஏகே 61’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் படங்களில் கவின் இணைந்தது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

விரைவில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் கவின் ரசிகர்கள் உற்சாம் அடைந்துள்ளனர்.