ஒவ்வொன்றுமே சும்மா அல்லு தெறிக்கும்... எம்.ஜி.ஆர், சிவாஜியை உயர்த்திய கருணாநிதி பேனா!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது கமல்ஹாசனின் புன்னகை மன்னனும், ரஜினி காந்தின் மாவீரனும் வெளியாக, தனது பாலைவன ரோஜாக்கள் படத்தைத் துணிந்து வெளியிடச் செய்து, அந்தப் படங்களுக்கு இணையான வெற்றியை கலைஞரின் படமும் பெற்றது.கலைஞரின் சினிமாவில் திராவிட வசனங்களை எழுதி மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார் கருணாநிதி.

ஒவ்வொன்றுமே சும்மா அல்லு தெறிக்கும்... எம்.ஜி.ஆர், சிவாஜியை உயர்த்திய கருணாநிதி பேனா!

பார் போற்றும் படைப்பாளி

கருணாநிதி என்றவுடன் பொறி பறக்கும் வசனங்களையும் மறந்திருக்க முடியாது. கருணாநிதியின் திரைப்பட வசனம் என்றாலும் சரி, அரசியல் வசனம் என்றாலும் சரி, பராசக்தி வசனம்தான் பலருக்கும் நினைவில் வந்துதிக்கும். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும், மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்ததற்கும், இருவரும் தங்கத் தேரில் பவனி வருவதற்கும் அச்சாணியாக, அவர்களது வெற்றிக்கு அச்சாரமாக திகழ்ந்தவர் கருணாநிதி. வெள்ளித்திரையில் கால் பதித்தது ராஜகுமாரி படத்தில் இருந்துதான்.   ராஜகுமாரி படத்தினைத் தொடர்ந்து  1950-ம் ஆண்டு வெளியான மந்திரி குமாரி படத்தில்தான் திராவிட இயக்கத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் பொறி ததட்டின. இந்த படத்தின் டைட்டில் கார்டை பார்க்காமலேயே வசனங்களை எழுதினார் கருணாநிதி.   சமூகத்தில் வேரோடிப் போயிருந்த மூட நம்பிக்கைகளை வேரறுக்க, ஜாலி கேலியான வசனங்களை எழுதியிருந்தார் கருணாநிதி..

மந்திரி குமாரி 

மந்திரிகுமாரிக்கு அடுத்து வெளியானதுதான் பராசக்தி. கலைஞரின் கை வண்ணத்தில் உருவான இந்த படத்தைப் பற்றி பேசாதவர்களே இருந்திருக்க முடியாது. ஆத்தீகத்தை எதிர்த்து நாத்தீகர் கருணாநிதி எபதிய வசனங்களில் அனல் பறந்தன. பராசக்தி படத்தினை எடுத்துக் கொண்டால் கதை மிகவும் சாதாரணமானதுதான். வசனத்தை தவிர்த்துப் பார்த்தோமேயானால் பராசக்தி என்றவொரு திரைப்படம் வெளியானதா என்ற கேள்வியையே நம்முள் கேட்க வைத்திருக்கும். ஆனால் இந்த படத்தினை எளியவர்கள் முதல் பெரியோர் வரையிலும் கொண்டு சேர்த்து புகழ் அடைய வைத்ததென்றால் அது கலைஞரின் வசனம்தான் என்பது மிகையல்ல. சுதந்திரத்தையும், தேசியகீதத்தையும் போற்றும் படங்கள் சில அப்போது வந்து கொண்டிருந்த சமயத்தில் திராவிடத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தது பராசத்தி. 

யார்? அம்பாளா பேசுவது..  முட்டாள்.. அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்? என்ற வசனமும், கோயில் வடாது என சொல்லவில்லை கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக்குடாது என்பதே என் வருத்தம் என்ற சிவாஜி பேசிய வசனங்கள் இன்றளவும் பார்க்கும் போது புல்லரிக்கச் செய்பவையாகும். தனது தங்கை பாதிக்கப்பட்டாள் என்பதற்காக நியாயம் கேட்கும் ஓர் அண்ணன், அவனது சுயநலத்தினை மட்டும் கருத்தில் கொள்ளாமல் திராவிடக் கொள்கையை, மக்களின் அறியாமையை, மக்களை ஏமாற்றும் மூடநம்பிக்கையை வசனங்களின் மூலம் சாட்டையடி கொடுத்த கலைஞரின் தீ பறக்கும் வசனத்தை பாராட்டாமல் இருக்கவே முடியாது. 
 

பராசக்தியைப் போன்றே இன்னொரு காவியமாக உருவாகியிருந்தது மனோகரா சிவாஜிகணேசன் நடித்த இந்த படத்தின் இறுதிக்காட்சியை ரசிகர்கள் கொண்டாடாமல் இருந்திருக்க முடியாது. கதையின் நாயகன் மனோகரா கதாபாத்திரத்தில் தோன்றிய சிவாஜிகணேசனை இழுத்து வரும் அந்தவொரு காட்சி. சிவாஜியை அழைத்துவருவதற்கு முன்பே, பின்னால் ஓங்கி ஒலிக்கவிருக்கும் வசனம் எனும் இடி முழக்கத்துக்கு முன்பே வந்து எச்சரிக்கை விடுத்திருப்பார் எஸ்.எஸ். ராஜேந்திரன்.
 

புயல் வீசப்போகிறது மன்னவரே, புயல்வீசப்போகிறது என்று சொல்லி முடிக்கவும், சங்கிலியால் கட்டப்பட்டு வந்த சிவாஜி பேச ஆரம்பிப்பார். அழைத்து வரவில்லை இழுத்து வரச் செய்திருக்கிறீர்கள் என பேச ஆரம்பித்த சிவாஜியின் ஒவ்வொரு வசனமும் போர்க்களத்தில் பாயவிருக்கும் வாள் முனையைப் போல கூர்தீட்டப்பட்டிருக்கும். 
 

இதே மனோகரா படத்தின் வேறொரு காட்சியைக் கூறாமல் விட்டு விட முடியாது. சிவாஜியின் அம்மாவாக நடித்திருந்த கண்ணாம்பாவுக்கென தனியாக வசனம் எழுதியிருப்பார் கலைஞர். பெண்களில் இடஒதுக்கீட்டினை அரசியலுக்கு வந்த பிற்பாடு அளித்திருந்தார் என்பதற்கு ஒரு சிறிய முன்னோட்டமே இது. தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஆண் நடிகர்களுக்கே அதிக வசனங்கள் எழுதுவது என்ற நிலையை மாற்றி பெண்ணுக்கு அதிகமான வசனங்கள் பெற்றது முதலில் கண்ணாம்பாதான்.

பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்ற அந்த ஒரு வார்த்தை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. கண்ணாம்பாவின் திரைப்பயணத்தில் ஆரம்பத்தில் சில சறுக்கல்களை சந்தித்தார். முக்கியமாக தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர் என்ற பெயர் எடுத்து வந்தார். அந்த விமர்சனத்தை சுக்குநூறாக உடைக்க வைத்தவர் கருணாநிதி. 
 
பொறுத்தது போதும் பொங்கி எழு கலைஞரின் கதை வசனத்தில் உருவான பூம்புகார் படத்தின் இறுதிக் காட்சியில் ரசிகர்களின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்திருப்பவை.  ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாலத்தின் நாயகி கண்ணகியின் வாழ்க்கைக்கதையை பிரபலித்து, வெற்றிக் காவியமாக மக்கள் மனதில் பதிந்தது பூம்புகார் திரைப்படம்தான். ஆனால் இந்த படத்துக்கு முன்பே, கண்ணகியின் வாழ்க்கை வரலாறு உருவாகியிருந்தது.

கண்ணாம்பாவின் நடிப்பில் கண்ணகி என்ற பெயரில் வெளியாகியிருந்தது. ஆனால் அந்த படத்தின் வசனங்கள் அந்த அளவுக்கு பெரிதாக ஈர்ப்பை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இரண்டாவதாக கலைஞரின் கை வண்ணத்தில் உருவான படத்தில் சி.ஆர்.விஜயகுமாரி பேசும் வசனங்கள் அது வெறும் வார்த்தைகளா? அல்ல நெஞ்சைக் குத்திக் கிழிக்கும் ஆயுதமா என்று கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு வல்லமை கொண்டிருந்தது. 
 
கருப்பு வெள்ளை சினிமா வண்ணமயமானதற்கு முன்பே, திராவிடம் எனும் கருப்பினையும், பொதுவுடைமை எனும் சிகப்பினையும் கலந்து புதிய பாதையில் பயணிக்க வைத்தார் கருணாநிதி. கருணாநிதிக்கு பிறகு எத்தனையோ திரைக்கலைஞர்கள் வந்தாலும், வாழ்ந்தாலும், மறைந்தாலும், அவர்கள் கலைஞர் கருணாநிதிக்கு சமமானதாக அமைந்து விட முடியாமலேயே போனது. அதுதான் கலைஞரின் வெற்றி. ஞாலத்துக்கே ஒளி கொடுக்கும் ஞாயிறு ஒன்றுதான். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற வார்த்தைக்கேற்ப, அன்று உதயமான சூரியன், இன்றும் கலையென்னும் ஆன்மா வழியாக பிரசாசித்துதான் வருகிறது. கலையில் கருத்துக்களை புகுத்திய அறிஞர். காலத்தை வென்ற படைப்பாளி கலைஞர்.